‘வாட்ஸ்அப்’ செயலியைக் குறிவைக்கும் ரஷ்ய ஊடுருவிகள்.
சான் ஃபிரான்சிஸ்கோ: ரஷ்ய அரசாங்கத்துடன் தொடர்புடைய ஊடுருவல் குழு ஒன்று உக்ரேனுக்கு உதவி வழங்கும் அரசாங்கச் சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்களின் ‘வாட்ஸ்அப்’ தரவுகளைத் திருட முயற்சி செய்ததாக ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் கூறியுள்ளது.
ரஷ்யாவின் மத்திய பாதுகாப்புச் சேவையுடன் தொடர்புடையவர்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பி, ‘வாட்ஸ்அப்’ குழுக்களில் சேருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்ததாக, ‘மைக்ரோசாஃப்ட்’ ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
அந்தப் போலிச் செய்திகள் அமெரிக்க அரசாங்க அதிகாரியிடமிருந்து வந்ததுபோல் இருக்கும். ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனுக்கு ஆதரவு அளிக்கும் திட்டங்கள் குறித்த விவரங்களை வழங்கும் விரைவுத் தகவல் குறியீடு (QR code) ஒன்றும் அதில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அத்துமீறி மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் வெற்றிபெற்றனவா என்பது குறித்து ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் கருத்துத் தெரிவிக்கவில்லை.
அந்த இணையத் தாக்குதல்கள் ‘ஸ்டார் பிளிஸர்ட்‘ எனும் அரசாங்க ஆதரவு ஊடுருவல் குழுவுடன் தொடர்புடையவை என்று கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதத்திலிருது, ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத்தின் உதவியோடு, அந்தக் குழுவுடன் தொடர்புடைய 180 இணையத்தளங்களின் செயல்பாட்டை அமெரிக்க நீதித் துறை நிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.