கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை; சஞ்சய் ராய் குற்றவாளி எனத் தீர்ப்பு.
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று சியல்டா நீதிமன்றம் சனிக்கிழமை (ஜனவரி 18) தீா்ப்பளித்துள்ளது. திங்கட்கிழமை (ஜனவரி 20) தண்டனை விவரம் அறிவிக்கப்படும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி கோல்கத்தாவில் உள்ள ஆர்ஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது சடலம் மருத்துவமனையில் கருத்தரங்கம் நடைபெறும் அரங்கில் இருந்து கைப்பற்றப்பட்டது.
இந்த துயர மரணம், இந்தியாவெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடு தழுவிய எதிர்ப்பைத் தூண்டியது. மருத்துவா்கள் தொடர் போராட்டங்களில் இறங்கினார்.
வழக்கில் காவல்துறைக்கு உதவி வந்த தொண்டூழியரான, சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையை மத்திய புலன் விசாரணை (சிபிஐ) அமைப்பிடம் உயர் நீதிமன்றம் ஒப்படைத்தது
சியால்டா நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட, அமா்வு நீதிபதி அனிா்பன் தாஸ் முன்னிலையில், வழக்கு விசாரணை 2024 நவம்பர் 12ஆம் தேதி தொடங்கி 57 நாள்கள் நடைபெற்றது. 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ஜனவரி 9ஆம் தேதி விசாரணை நிறைவடைந்தது.
கொலை வழக்கில் சஞ்சய் ராய் பிரதான குற்றவாளி என குற்றப்பத்திரிகையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது. சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் சிபிஐ வலியுறுத்தியது.
விசாரணையில் தான் தவறாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும், குற்றத்தைத் தான் செய்யவில்லை என்றும் சஞ்சய் ராய் தெரிவித்தார். குற்றச் சம்பவத்தில் ஐபிஎஸ் அதிகாரியும் உள்ளதாக அவர் வாதிட்டார்.
தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்னர் திங்கட்கிழமை அவருக்குப் பேச வாய்ப்புக் கிடைக்கும் என்று நீதிபதி கூறினார்.
அவரை மீண்டும் சிறைக்கு அனுப்புவதற்கு முன்பு, குற்றம் சாட்டப்பட்டவரின் பாதுகாப்பும் முக்கியம் என்று பொதுமக்களுக்கு அனுமதியில்லாத நீதிமன்றத்தில் நீதிபதி கூறினார்.
தீர்ப்பைத் தொடர்ந்து எட்டு கார் வாகன அணிவகுப்பில் சஞ்சோய் ராய் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நீதிக்கான பரவலான அழைப்புகளுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், அரசு மருத்துவமனைகளில் சுகாதார நிபுணர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பிற்கான கோரிக்கைகளையும் மீண்டும் எழுப்பியது.