மகா கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து!

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியையொட்டி கடந்த வாரம் (ஜன. 13) தொடங்கியது. மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வின் 6 ஆம் நாளான இன்று திரளான பக்தர்கள் கலந்துகொண்ட நிலையில் கும்பமேளா நடைபெறும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்காக அமைக்கப்பட்டக் கூடாரங்களில் பிடித்த தீ பல இடங்களில் பரவியதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. தீ விபத்தால் கூடாரங்களில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எரிந்து சாம்பலானது. தீ பரவுவதாக தகவல் கிடைத்ததுவுடன் பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.

தீவிபத்தால் ஏற்பட்ட கரும்புகை அங்கு பெரியளவில் பரவி புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது. செக்டார் 19 பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருகில் உள்ள கூடாரங்களில் வசித்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதுவரை 12 கூடாரங்கள் எரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து வருவதால் தீ வேகமாகப் பரவுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

தீயணைப்புத் துறையினர் கடுமையாகப் போராடி தீயை அணைக்க முயற்சித்து வரும் நிலையில், அங்குள்ள மக்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தீ விபத்தில் யாரேனும் காயமடைந்தார்களா போன்ற விவரங்கள் வெளியாகவில்லை

Leave A Reply

Your email address will not be published.