ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தந்தை கலாநிதி ம.சண்முகலிங்கம் மறைவு : இறுதிக் கிரியைகள் இன்று ….
ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தந்தை என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி ம.சண்முகலிங்கத்தின் (குழந்தை) இறுதிக் கிரியைகள் இன்று திங்கட்கிழமை (20) நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் 1931 ஒக்டோபர் 15ஆம் திகதி இவர் பிறந்தார்.
நீர்கொழும்பில் தங்கொட்டுவ கிராமத்தில் தன் தந்தை வேலை செய்த தென்னை எஸ்ரேட்டில் வளர்ந்தவர், அங்கு அடிநிலை சிங்கள தமிழ் மக்களோடு வாழ்ந்திருக்கிறார்.
இவர் ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை மிக்கவர்.
100க்கு மேற்பட்ட சுய ஆக்க நாடகங்களையும் 60க்கு மேற்பட்ட மொழிபெயர்ப்பு நாடகங்களையும் தமிழ் நாடக உலகிற்கு தந்த பேராளுமை.
இவரது ஆற்றலும் ஆளுமையுமே நாடகமும் அரங்கியலும் என்ற பாடத்துறை தமிழில் வளர்ச்சியடைய காரணமாக அமைந்தது.
குழந்தை ம. சண்முகலிங்கம் மாணவர்கள் கற்பதற்காக ஏராளமான ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
தனது கருத்துக்களை நாடகத்தினூடாக சொல்வதில் எந்த சமரசத்துக்கும் செல்லாதவர்.
“மண்சுமந்த மேனியர்”, “எந்தையும் தாயும்”, “அன்னையிட்ட தீ”, “ஆர்கொலோ சதுரர்”, “கூடிவிளையாடு பாப்பா”, “பஞ்சவர்ணநரியார்” முதலானவை இவரது முக்கியமான நாடகங்களாகும்.
இவரது நாடகப்பணியைப் பாராட்டி கிழக்கு பல்கலைக்கழகம் இவருக்கு கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
அன்னார் வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 93ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை (17) காலமானார்.
அன்னாரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாளை திங்கட்கிழமை (20) இறுதி கிரியைகள் நடைபெறவுள்ளது.