காஸாவில் சண்டை நிறுத்தம் நடப்புக்கு வந்தது.

காஸாவில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) சிங்கப்பூர் நேரப்படி மாலை 5.15 மணிக்கு சண்டை நிறுத்தம் நடப்புக்கு வந்ததாக இஸ்ரேல் தெரிவித்தது. இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் உத்தரவால் கடைசி நேரத்தில் தாமதமான சண்டை நிறுத்தம், ஆரம்பத்தில் திட்டமிட்டதைவிட கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து தொடங்கியது.

காஸாவில் சண்டை நிறுத்தத்திற்கான காலக்கெடுவை இஸ்ரேலும் ஹமாசும் முதலில் தவறவிட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய போர் விமானங்களும் பீரங்கிகளும் காஸா பகுதியைத் தாக்கியதில் 19 பேர் கொல்லப்பட்டதாகவும் 25 பேர் காயமுற்றதாகவும் காஸாவின் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

சண்டை நிறுத்த உடன்பாட்டின் ஒரு பகுதியாக, விடுவிக்கப்படவிருந்த மூன்று பிணைக்கைதிகளின் பெயர் விவரங்களை ஹமாஸ் வழங்கும்படி பிரதமர் நெட்டன்யாகு கோரியிருந்தார்.

இல்லாவிடில், சண்டை நிறுத்தம் நடப்புக்கு வராது என அவர் கூறியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை காஸாவில் தாக்குதல் தொடர்ந்தது.

காஸா சண்டை நிறுத்தத்திற்கு தன் கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்திய ஹமாஸ், தொழில்நுட்பக் காரணங்களாலும் கள நிலவரத்தில் ஏற்பட்ட சிக்கலாலும் பிணைக்கைதிகளின் பெயர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக விளக்கமளித்து இருந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்படவிருந்த மூன்று இஸ்ரேலியப் பெண்களின் பெயர்களை உள்ளூர் நேரம் காலை 10.30 மணியளவில் ஹமாஸ் வெளியிட்டது.

இந்நிலையில், அப்பட்டியல் தனக்குக் கிடைத்திருப்பதை உறுதிப்படுத்திய இஸ்ரேல், அதன் விவரங்களைச் சரிபார்த்ததாகக் கூறியது. பின்னர், உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.15 மணிக்கு சண்டை நிறுத்தம் தொடங்கியதை அது உறுதிப்படுத்தியது.

இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர்கள் முன்னதாக வெளியிட்ட வெவ்வேறு அறிக்கைகளில், இஸ்ரேலியப் போர் விமானங்களும் பீரங்கிகளும் வடக்கு, மத்திய காஸாவில் உள்ள ‘பயங்கரவாத இலக்குகளை’ தாக்கியதாகத் தெரிவித்தனர். சண்டை நிறுத்த உடன்பாட்டின்கீழ் ஹமாஸ் அதன் கடப்பாட்டைப் பூர்த்திசெய்யாத வரை, காஸா பகுதியை இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து தாக்கும் என்றும் அப்பேச்சாளர்கள் எச்சரித்திருந்தனர்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அரங்கேறிய இஸ்ரேலின் தாக்குதல்களில், வடக்கு காஸாவில் மூவரும் காஸா சிட்டியில் ஐவரும் கொல்லப்பட்டதாக காஸா குடிமைத் தற்காப்புப் படை பேச்சாளர் தெரிவித்தார்.

காஸாவின் ஜீட்டூன் பகுதியில் கவச வாகனங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும், வடக்குப் பகுதியான பெய்ட் ஹனூனில் வான்வழித் தாக்குதலும் கவச வாகன துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டதாக அவர்கள் கூறினர். சண்டை நிறுத்தத்தை எதிர்பார்த்து வசிப்பிடம் திரும்பிய மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

காஸாவின் ராஃபா முதல் எகிப்து-காஸா எல்லை வழியிலான ஃபிலடெல்ஃபி பாதை வரை இஸ்ரேல் அதன் படைகளை மீட்டுக்கொள்ளத் தொடங்கியதாக ஹமாசுக்கு ஆதரவான ஊடகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது.

சண்டை நிறுத்தம் நெருங்கிய வேளையில், பாலஸ்தீனப் பகுதியைச் சுற்றி நடமாடுவதையும் இஸ்ரேலியப் படைகளை அணுகுவதையும் தவிர்க்கும்படி காஸா மக்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்திருந்தது.

Leave A Reply

Your email address will not be published.