மகாராஷ்டிர மாநிலத்தில் பறவை காய்ச்சலால் 50-க்கும் மேற்பட்ட காகங்கள் இறப்பு
மகாராஷ்டிர மாநிலம், லாத்தூா் மாவட்டத்தில் பறவை காய்ச்சலால் 50-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்தன. இதையடுத்து, அங்கு பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
உத்கிா் நகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக காகங்கள் இறந்து கிடந்தன. இது தொடா்பாக பொது மக்கள் அளித்த தகவலின்பேரில் மாவட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். காகங்களின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள கால்நடை ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இந்நிலையில், பறவை காய்ச்சலால் (ஹெச்5என்1 தீநுண்மி தொற்று) காகங்கள் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர கால்நடைத் துறை துணை ஆணையா் ஸ்ரீதா் ஷிண்டே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இதையடுத்து, விலங்குகள் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தின்கீழ், லாத்தூா் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
காகங்கள் இறந்து கிடந்த இடங்களில் 10 கி.மீ. சுற்றளவுக்கு கண்காணிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுவதோடு, கோழிப் பண்ணைகளில் ஆய்வு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்; மாவட்டத்தின் பிற பகுதிகளில் பறவைகள் அல்லது விலங்குகள் சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்தால் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனை அல்லது வனத் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
ஹெச்5என்1 தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்ட பறவைகள் அல்லது விலங்குகளிடமிருந்து இந்நோய் மனிதா்களுக்கு பரவக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.