மன்னார் இரட்டைக் கொலை வழக்கில் மூவர் கைது.. முக்கிய சந்தேக நபர் ஒரு ராணுவ சிப்பாய்!
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த 16 ஆம் திகதி காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு பேரைக் கொன்று, இருவரைப் படுகாயத்திற்குள்ளாக்கிய சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபர் நாரஹேன்பிட்டி இராணுவ மருத்துவமனையில் பணியாற்றும் இராணுவ வீரர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர்கள் கொழும்பு மற்றும் சீதுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், பணம் பெற்று நடைபெறும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தக் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மன்னார், நொச்சிகுளம், மற்றும் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த சவேரியன் அருள் என்ற 61 வயது முதியவரும், செல்வகுமார் ஜூட் என்ற 42 வயது நபருமே குறித்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர், மேலும் ஒரு பெண்ணும், ஒரு ஆணும் படுகாயமடைந்தனர். 16 ஆம் திகதி காலை மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் இச்சம்பவம் இடம் பெற்றது.
மன்னார் உயிலங்குளம் பகுதியில் நடந்த ஒரு கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்திற்கு வழக்கொன்றிற்கு வருகை தந்த சந்தேக நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் மன்னார் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.
மன்னார் பாதுகாப்பு தரப்பினரின் கூற்றுப்படி, ஜூலை 8, 2022 அன்று, உயிலங்குளம், நொச்சிகுளம் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் விதமாக, 2023.ஓகஸ்ட் 23 அன்று மன்னாரின் அடம்பன் பகுதியில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து மன்னார் காவல்துறை உட்பட பல குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.