பிஹாரில் கள்ளச் சாராயம் குடித்த 7 பேர் பலி
பிஹாரில் கள்ளச்சாரம் குடித்து 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிஹாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த சாராயத்தை குடித்த 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்களது உடல்கள் அனைத்தும் தகனம் செய்யப்படும் வரை இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு எதுவும் செய்யவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இதுகுறித்து காவல் துறை கண்காணிப்பாளர் சவுரியா சுமன் கூறும்போது, “ லவுரியா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால், 7 பேரின் மரணத்துக்கும் கள்ள சாராயம் காரணமில்லை. ஒருவர் டிராக்டர் மோதியும், மற்றொருவர் பக்கவாத பாதிப்பாலும் உயிரிழந்துள்ளனர். ஏனைய 5 பேரின் மரணத்துக்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
இதுகுறித்து இறந்தவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “ எனது சகோதரர் பிரதீப் நண்பருடன் சேர்ந்து கள்ளச்சாராயம் அருந்தியுள்ளார். சிறிது நேரத்தில் உடல்நிலை மோசமாகி இருவரும் இறந்துவிட்டனர்” என்றார்.
பிஹாரில் நிதிஷ் குமார் ஆட்சியின்போது மது விற்பனைக்கு கடந்த 2016-ல் தடைவிதிக்கப்பட்டது. இருப்பினும், இதுபோன்ற கள்ளச்சாராய சாவுகள் அவ்வப்போது நிகழ்வது பொதுமக்களிடையே கவலையை அதிகரித்துள்ளது.