பெண் மருத்துவர் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை : தீர்ப்பை எதிர்த்து மேற்கு வங்க அரசு மேல்முறையீடு.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேற்கு வங்க மாநில அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசுத் தரப்பு கோரியது. ஆனால், இது ‘அரிதினும் அரிதான வழக்கன்று’ எனக் கூறி, மரண தண்டனை விதிக்க மறுத்த நீதிபதி, வாழ்நாளின் இறுதிவரை சிறையில் கழிக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
தலைநகர் கோல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2024 ஆகஸ்ட் 9ஆம் தேதி 34 வயது பெண் மருத்துவர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அம்மாநில மருத்துவர்கள் பல வார காலமாக நீதி கேட்டுப் போராடினர்.
அவ்வழக்கில் சஞ்சய் ராய் என்ற ஆடவர் கைதுசெய்யப்பட்டார். அவர் ‘தான் குற்றமிழைக்கவில்லை, வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளேன்’ என இறுதிவரை தொடர்ந்து கூறிவந்தார். ஆயினும், சாட்சியங்கள் அனைத்தும் அவருக்கு எதிராக இருந்ததால் வாழ்நாள் இறுதிவரையிலும் அவர் சிறையில் கழிக்கும்படி திங்கட்கிழமையன்று (ஜனவரி 20) நீதிபதி ஆயுள் தண்டனை விதித்தார்.
சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசுத் தரப்பு கோரிக்கை விடுத்த நிலையில், ‘இது அரிதினும் அரிதான வழக்கன்று’ எனக் கூறி, நீதிபதி அதனை ஏற்க மறுத்தார்,
குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்காதது தொடர்பில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்திருந்தார்.
மாநில அரசு கையாண்ட இத்தகைய வழக்குகளில் எல்லாம் மரண தண்டனை பெற்றுத் தந்துள்ளது என்றும் இம்முறை இவ்வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தங்கள் வசமிருந்து பறித்துக்கொண்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் எனக் கோரி, மேற்கு வங்க அரசு சார்பில் கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.