யாழ். பள்ளிக்குடா பகுதியில் 7 கோடி கேரள கஞ்சாவுடன் , 4 நபர்கள் கைது.
யாழ்ப்பாணம், பள்ளிக்குடா பகுதியில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 108 கிலோகிராம் 450 கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ். காவல் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதன் அதிகாரிகள் குழு,பள்ளிக்குடா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு போக்குவரத்துக்குத் தயாராக இருந்த கேரள கஞ்சாவையும், அங்கு இருந்த சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
மீன்பிடித்தல் என்ற போலிக்காரணத்தோடு யாழ்ப்பாணக் கடற்பரப்பில் இருந்து படகு மூலம் பயணித்து, இந்தியக் கடற்பரப்பிற்குள் நுழைந்து, இந்தியக் கடத்தல்காரர்களிடமிருந்து கேரள கஞ்சாவை வாங்கி, மீன்பிடித்தல் என்ற போலிக்காரணத்தில் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி, பின்னர் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்ல சந்தேக நபர்கள் திட்டமிட்டுள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார், மாங்குளம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், 31 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.