சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்ட ‘கும்பமேளா வைரல் பெண்’ மோனாலிசா.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்கும் பெண் ஒருவர் தான் கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரல் டாபிக். எங்கு திரும்பினாலும் இவருடைய புகைப்படங்களே வலம் வருகின்றன.

இந்தியாவில் மத்தியப்பிரதேச மாநில இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்துவந்தார்.

பிரபல மாடல்களே தோற்றுப் போகும் வகையில் இவரது எழில்கொஞ்சும் அழகிய தோற்றம் காண்போரை வசீகரித்தது.

யூடியூபர் ஒருவர் இவரை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யவே சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக மாறினார் அந்த பெண். அவரது தோற்றத்தை வைத்து அவருக்கு ‘மோனாலிசா போஸ்லே’ என்று நெட்டிசன்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

ஆனால் இவர் அடைந்த பிரபலமே இவருக்கு வினையாகவும் மாறிவிட்டது. ஓரிரு தினங்களிலேயே இவரைக் காண கூட்டம் கூட்டமாக பலர் திரண்டனர்.

இவருடன் செல்ஃபி எடுக்க விரும்பி முண்டியடித்தனர். இதனால் இவர்களது குடும்பத்தின் வருமானம் பாதிக்கப்பட்டது. இன்னும் சிலரோ கூட்டத்தை பயன்படுத்தி மோனாலிசாவிடம் எல்லை மீறவும் செய்திருக்கின்றனர். இது தொடர்பான வீடியோவில், செல்ஃபி எடுப்பதற்காக அவரை துன்புறுத்த முயலும் கூட்டத்திடமிருந்து காப்பாற்ற, பெண் ஒருவர் துணியால் மோனலிசாவின் முகத்தை மூடுகிறார். இந்த வீடியோ வைரலானதையடுத்து பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து அந்த பெண்ணை அவரது குடும்பத்தார் பிரயாக்ராஜில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டனர்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள சமீபத்திய வீடியோவில் பேசும் அந்த பெண்,

“என் குடும்பத்திற்காகவும், என் பாதுகாப்புக்காகவும் நான் இந்தூருக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். முடிந்தால், அடுத்த மகா கும்பமேளாவிற்கு நான் திரும்பி வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.