சூரியன் மறைந்தால்தான் மக்களுக்கு வெளிச்சம் வரும்: சீமான்
தமிழகத்தில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்தவர்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவி பிரச்சினையில் பாமக போன்ற கட்சிகளுக்கு அனுமதி மறுத்தது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் நுழைய ‘கியூஆர்’ கோடு கட்டாயமாக்கி இருப்பதாகக் கூறுகிறார்கள் என்றும் இது தாமதமான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.
“கிழக்கில் சூரியன் உதித்தால்தான் உலகத்துக்கு வெளிச்சம். ஈரோடு கிழக்கு தொகுதியில் சூரியன் மறைந்தால்தான் மக்களுக்கு வெளிச்சம் வரும்.
“பெரியார் குறித்து இப்போது விமர்சிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். தலைவலி வரும்போது தான் மாத்திரை போட முடியும். பெரியாரை எதிர்த்து அரசியல் கட்சி தொடங்கியவர்கள்தான் இப்போது அவருக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்.
“பெரியாரை அவர்கள் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள். பெரியார் பற்றி பேசுகிறவர்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பேசி வாக்கு சேகரிக்க வேண்டியது தானே? நீங்கள் பெரியாரை திராவிடக் குறியீடாகப் பார்க்கிறீர்கள். நாங்கள் பிரபாகரனை தமிழ் தேசியத்தின் பெரும் குறியீடாகப் பார்க்கிறோம்,” என்றார் சீமான்.