ட்ரம்ப் – சாதிப்பாரா? சறுக்குவாரா? சுவிசிலிருந்து சண் தவராஜா.

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுள்ளார். யனவரி 20ஆம் திகதி திங்கட்கிழமை தலைநகர் வாஷிங்டனில் இந்தப் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக, துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் பதவியேற்றுக் கொண்டார். உச்ச நீதிமன்ற நீதிபதி பிறெற் கவனவ் இருவருக்குமான பதவிப் பிரமாணத்தைச் செய்து வைத்தார். வாஷிங்டனில் நிலவிய பூச்சியம் பாகைக்கும் குறைவான குளிர் காரணமாகவும், பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் பதவியேற்பு நிகழ்வு திறந்தவெளியில் நடைபெறாமல் மூடப்பட்ட அரங்கினுள் நடைபெற்றது.

அமெரிக்க வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு தடவைகளாக தேர்தல்களில் வென்று ஜனாதிபதி பதவியைப் பெற முடியாமல் போன ஜனாதிபதி வரிசையில் இரண்டாவது நபராக ட்ரம்ப் உள்ளார். இந்த வரிசையில் முதலாவது ஆளாக 22ஆவது (1885-1889) மற்றும் 24ஆவது (1893-1897) ஜனாதிபதியாகப் பதவி வகித்த குரோவர் கிளேவ்லான்ட் உள்ளார்.

பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றிய ட்ரம்ப் வழக்கம் போல வீராவேச முழக்கங்களை எழுப்பியிருக்கிறார். தேர்தல் பரப்புரைகளின் போது தான் கூறிய விடயங்கள் அனைத்தையும் தனது பதவிக் காலத்தில் செய்து முடிக்க உள்ளதாக அவர் மீள நினைவுபடுத்தி உரையாற்றி உள்ளார்.

காஸா போர்நிறுத்தம் தொடர்பில் குறிப்பிட்ட ட்ரம்ப், ‘சமாதானத்தை உருவாக்குபவராகவும், ஒற்றுமைப்படுத்துபவராகவும் விளங்குவதே எனது பெருமைமிக்க மரபு. அவ்வாறு தொடர்ந்தும் இருக்கவே நான் விரும்புகிறேன்’ எனக் கூறினார். அவர் மனப்பூர்வமாக அவ்வாறு கூறுவாரானால், கூறியபடியே அவர் நடந்து கொள்வாரானால் அது உலகுக்கு நல்லது. காஸாவில் நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டுவர தனது ராஜதந்திரத்தைப் பாவித்த அவரே பனாமா கால்வாயைக் கைப்பற்றப் போகிறேன் எனக் கூறுவது எவ்வகையில் சமாதானத்தை உருவாக்கும் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

காஸா விவகாரத்தில் ட்ரம்ப் செயற்பட்ட விதம் உண்மையில் பாராட்டுதலுக்கு உரிய ஒன்றே. மேனாள் ஜனாதிபதி ஜோ பைடன் அவர்களால் பதவியில் இருந்துகொண்டு செய்ய முடியாமல் போன ஒரு விடயத்தை பதவியை ஏற்பதற்கு முன்னதாகவே ட்ரம்ப் செய்து காட்டியிருக்கின்றார்.

இதுபோன்று உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் ஆர்வத்தோடு செயற்பட்டால் அது பாருக்கு நல்லது. தான் பதவியேற்று 24 மணி நேரத்தினுள் உக்ரைன் போர் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என அவர் தேர்தல் பரப்புரைகளின் போது குறிப்பிட்டிருந்தார். 24 மணி நேர காலக்கெடு என்பது அதீத எதிர்பார்ப்பே என்ற போதிலும் அடுத்துவரும் ஒருசில நாட்களில் அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பார் என நம்பப்படுகின்றது. ஏற்கனவே புட்டினை ட்ரம்ப் நேரில் சந்திக்கலாம் என்ற செய்திகள் ஊடகங்களில் பரவலாக அடிபடுவதைப் பார்க்க முடிகின்றது. அதற்கு முன்னதாக இருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போது அத்தகைய தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

‘புட்டின் ஒரு நல்ல மனிதர். தான் ஜனாதிபதி பதவியில் இருந்திருந்தால் உக்ரைன் மோதல் உருவாகியிருக்க வாய்ப்பு இருந்திருக்காது. மேனாள் ஜனாதிபதி ஜோ பைடனின் போக்கு காரணமாகவே இந்தப் போர் உருவானது. இது தொடர்பில் புட்டினுடன் நான் பேச இருக்கிறேன். சமரசத்துக்கு வர அவர் தயாராக இல்லையென்றால் ரஸ்யா மீது மேலும் பொருளாதாரத் தடை விதிக்கத் தயங்க மாட்டேன்’ என ட்ரம்ப் கூறியுள்ளமை நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.

அதிரடி அரசியல்வாதி எனக் கருதப்படும் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பல கருத்துகள் சர்ச்சையை அல்லது பதட்டத்தைத் தோற்றுவித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறியுள்ள ட்ரம்ப் மெக்சிகோ நாட்டின் எல்லைப் பகுதிக்கு மேலதிக படையினரை அனுப்பி வைக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

அது மாத்திரமன்றி ஏற்கனவே அமெரிக்காவில் குடியிருப்பவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் பிறப்பதனால் மாத்திரம் அவர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமையை வழங்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பிறப்பினால் குடியுரிமை என்ற சட்டம் 1868 யூலையில் அரசியலமைப்பின் 14ஆவது திருத்தமாக நிறைவேற்றப்பட்ட ஒன்று. அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட கறுப்பினத்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்குடன் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் தவறாகக் கையாளப்படுவதாகக் கருதும் ட்ரம்ப் அதனை நீக்கும் யோசனையை முன்வைத்துள்ளார். இந்தச் சட்ட நீக்கம் காரணமாக சட்டவிரோதக் குடியேறிகளின் வாரிசுகள் மாத்திரமன்றி, தொழில் காரணங்களால் அமெரிக்காவில் வசிக்கும் குடும்ப வாரிசுகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக 7,25,000 இந்தியர்கள் இந்தச் சட்ட நீக்கம் காரணமாகப் பாதிக்கப்பட உள்ளனர்.

இதேவேளை, இந்தச் சட்ட நீக்கத்துக்கு எதிராக அமெரிக்காவின் 22 மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. அந்த மாநிலங்களின் சட்டமா அதிபர்கள் இது தொடர்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். புதிய சட்டம் பெப்ரவரி 19ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் நீதிமன்றங்கள் வழங்கப்போகும் தீர்ப்பு முக்கியமாக எதிர்பார்க்கப்படுகின்றது. இது ட்ரம்ப் ஆட்சி குறித்த முக்கிய மதிப்பீடாக அமையக் கூடும்.

புதிய சட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் உலகில் அமெரிக்காவில் மட்டுமே பிறப்பால் குடியுரிமை வழங்கப்படும் சட்டம் நடைமுறையில் உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், உலகில் 33 நாடுகளில் இந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆண், பெண் இனங்கள் தவிர மனிதரில் வேறு இனங்கள் இல்லை என ட்ரம்ப்; தெரிவித்துள்ள மற்றொரு கருத்து மூன்றாம் பாலினத்தவர்களின் எதிர்காலம் குறித்த கவலையைத் தோற்றுவித்துள்ளது. இந்த விடயத்தில் அவர் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறார் எனத் தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பில் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் நிச்சயமாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அவரது மதிப்பைக் குறைக்கும் என்பது மாத்திரம் நிச்சயம். பல்வேறு போராட்டங்கள் ஊடாகவே மூன்றாம் பாலினத்தவர் தமது தற்போதைய உரிமைகளை நிலைநாட்டி உள்ளனர். ஜனநாயகத்தின் காவலன் எனத் தன்னைப் பிரகடனம் செய்துள்ள ஒரு நாட்டில் அவர்களின் இருப்பு கேள்விக்குறியானால் அதனை எவ்வாறு புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை.

மறுபுறம், உலக நாடுகளுக்கான அமெரிக்க பொருண்மிய உதவிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதற்கு ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். இது தற்காலிக நடவடிக்கை என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இதன் பரிமாணம் என்னவாக இருக்கும் எனத் தற்போதுவரை தெரியவில்லை. இந்தப் பொருண்மிய உதவியில் படைத் துறை உதவிகளும் அடங்குமா என்பது தெளிவில்லாமல் உள்ளது. இஸ்ரேல், உக்ரைன், தாய்வான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா பெருமளவிலான படைத் துறை உதவிகளை வழங்கி வருவது தெரிந்ததே. அவை நிறுத்தப்படுமானால் என்ன நிகழும் என்பதை ஊகிப்பது கடினமாக உள்ளது.

அமெரிக்கா என்ற நாட்டின் ஜனாதிபதியாக ட்ரம்ப் இருந்தாலும் நாட்டை ஆள்வது அவர் தனித்து அல்ல என்பது வெளிப்படையான விடயம். அவரைச் சூழ உள்ள ஆளும் வர்க்கம், பெரு வணிகர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் என்பவர்களைப் புறக்கணித்து ட்ரம்பினால் தனித்து எதனையும் செய்ய முடியாது என்பது இரகசியம் அல்ல. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பாணியில் ஆரம்பத்தில் சில விடயங்களைச் செய்ய முடியலாம். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவர் தனது பாதையை மற்றவர்களுக்காக மாற்றிக் கொள்ள நேரிடும். பாதையை மாற்றிக் கொள்ள தானாக முன்வராவிட்டால் அவரை எவ்வாறு தமது வழிக்குக் கொண்டு வருவது என்பது அவரைத் தேர்தலில் ஆதரித்து பதவியில் அமர்த்தியவர்களுக்குத் தெரியாத விடயமல்ல.

-சுவிசிலிருந்து சண் தவராஜா

Leave A Reply

Your email address will not be published.