இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான யுத்த நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான யுத்த நிறுத்தம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதனை வெள்ளை மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த யுத்த நிறுத்த நீடிப்புக்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் 60 நாள் யுத்த நிறுத்தம் அமெரிக்க ஏற்பாட்டில் நடைமுறைக்கு வந்தது.
அந்த யுத்த நிறுத்தத்தின் ஊடாக ஹிஸ்புல்லா- இஸ்ரேல் இடையே ஒரு வருடமாக நீடித்து வந்த யுத்தம் நிறுத்தப்பட்டது. என்றாலும் இந்த 60 நாள் யுத்த நிறுத்த காலப்பகுதிக்குள் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படையினர் வெளியேறவும் அப்பகுதிகளில் லெபனானிய படையினரை கடமையில் ஈடுபடுத்தவும், ஹிஸ்புல்லா அமைப்பினரை தெற்கு லெபனானில் இருந்து லிட்டானி ஆற்றுக்கு அப்பால் அப்புறப்படுத்தவும் இணக்கம் காணப்பட்டிருந்தது.
இந்நிலையில் 60 நாள் போர் நிறுத்தம் கடந்த ஞாயிறன்று முடிவுற்ற போதிலும் இஸ்ரேலிய படையினர் தெற்கு லெபனானில் இருந்து வெளியேறவில்லை.
லெபனான் இராணுவம் தெற்கு லெபனானின் அனைத்து பகுதிகளிலும் இன்னும் கடமையில் ஈடுபடுத்தப்படாததால் தமது படையினர் தொடர்ந்தும் தங்கியிருக்க வேண்டியுள்ளது என்று இஸ்ரேல் கூறியது. இந்நிலையில் தெற்கு லெபனானின் 60 இற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மக்களை திரும்ப வேண்டாம் என்றும் இஸ்ரேல் ஞாயிறன்று அறிவித்தது.
இருப்பினும் அக்கிராமங்களுக்கு திரும்பியவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டதோடு 80 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இது இஸ்ரேல் – லெபனான் யுத்த நிறுத்தத்தை கேள்விக்குள்ளாக்கும் நிலையை ஏற்படுத்தியதோடு போர்ப் பதற்றத்தையும் தோற்றுவித்திருந்தது.
இந்நிலையில் வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையிலேயே லெபனான்- இஸ்ரேல் யுத்த நிறுத்தம் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை நீடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.