இந்தியா – சீனா விமானச் சேவை ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் …
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான விமானச் சேவைகள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கவிருக்கிறது. அதற்காக இரு நாடுகளும் கொள்கை அளவிலான உடன்பாட்டுக்கு இணக்கம் கண்டுள்ளன.
கொவிட்-19 தொற்று, எல்லை தொடர்பான அரசியல் பதற்றங்கள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன.
கடந்த திங்கட்கிழமை, இந்தியாவின் உயர்மட்ட அரசதந்திரி ஒருவர் சீனாவுக்கு அதிகாரபூர்வமாகச் சென்றிருந்தார். அப்போது அவர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யி-ஐ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே இருந்த பனிப்போர் தணிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
2020ஆம் ஆண்டில் இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடும் ஜம்மு-காஷ்மீர் வட்டாரத்தில் உள்ள லடாக் எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய, சீனத் துருப்புகள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 20 இந்திய வீரர்களும், 4 சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். அதையடுத்து இந்த இரு நாடுகளும் மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்தன. அதற்குப் பிறகு இப்போதுதான் இந்தியாவின் வெளியுறவு அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இரண்டு நாள் அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு பெய்ஜிங் சென்றுள்ளார். இது இந்திய, சீன உறவில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானச் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு இரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
விமானச் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து இரு தரப்பு தொழில்நுட்பத் துறை உயர் அதிகாரிகள் கூடிய விரைவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள கைலாஷ் மன்சரோவர் என்னும் இந்துக் கோயிலுக்கு இந்திய பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது பல ஆண்டுகளாக தடைபட்டிருந்தது. இப்போது அந்தத் தடையை விலக்கிக் கொள்ளும் வகையில் சீனா இந்திய பக்தர்களை அனுமதிப்பதற்கு இணக்கம் கண்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“பொருளாதார, வர்த்தக ரீதியில் இருந்து வந்த சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் வகையில், நல்லுறவையும் நம்பிக்கையையும் மீட்டெடுப்பதற்கு அரச தந்திர உறவை வலுப்படுத்த இந்த இரண்டு நாடுகளும் உறுதிகொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
கொவிட்-19 தொற்று நெருக்கடிக்கு முன்னர் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மாதத்திற்கு 500 விமானச் சேவைகள் இருந்து வந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சு, விமானச் சேவை மீண்டும் தொடங்கவிருப்பது குறித்த தகவலைத் தெரிவிக்கவில்லை. ஆனால், கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளும் உறவை மேம்படுத்துவதற்காக பாடுபட்டு வருகின்றன. இரு நாடுகளும் பயன்பெறும் வகையில் இந்தியா, சீனா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது.