இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ‘டி-20’ போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி .

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் இந்தியா வென்றது. மூன்றாவது போட்டி நேற்று குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடந்தது. அர்ஷ்தீப் சிங்கிற்கு ‘ரெஸ்ட்’ கொடுக்கப்பட்டது. கணுக்கால் காயத்தில் இருந்து மீண்ட ‘வேகப்புயல்’ ஷமி, 436 நாட்களுக்கு பின் இந்திய அணியில் இடம் பெற்றார். தொடர்ந்து 3வது முறையாக ‘டாஸ்’ வென்ற கேப்டன் சூர்யகுமார், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் (5) ஏமாற்றினார். பின் கேப்டன் ஜோஸ் பட்லர், பென் டக்கெட் அசத்தினர். அதிரடியாக ஆடிய டக்கெட், ஹர்திக் பாண்ட்யா ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். வாஷிங்டன் சுந்தர் ஓவரில் டக்கெட் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, 15 ரன் எடுக்கப்பட்டன. இந்த சமயத்தில் வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தை பட்லர் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ செய்தார். அதை கச்சிதமாக பிடித்த கீப்பர் சஞ்சு சாம்சன் ‘அப்பீல்’ செய்தார். கள அம்பயர் மறுத்தார். இந்தியா ‘ரிவியு’ கேட்டது. ‘ரீப்ளே’வில் பந்து, பட்லரின் (24) பேட்டை உரசிச் சென்றது உறுதியாக, பெவிலியன் திரும்பினார். 26 பந்தில் அரைசதம் எட்டிய டக்கெட் (51 ரன், 7 பவுண்டரி, 2 சிக்சர்), அக்சர் படேல் ‘சுழலில்’ சிக்க, நிம்மதி பிறந்தது.

ஹாரி புரூக்(8) நிலைக்கவில்லை. பின் வருண் சக்ரவர்த்தி ‘சுழலில்’ இங்கிலாந்து விக்கெட்டுகள் சரிந்தன. இவரது ஒரே ஓவரில் (14வது) ஜேமி ஸ்மித் (6), ஓவர்டன் (0) அவுட்டாகினர். இவரது அடுத்த ஓவரில் கார்ஸ் (3) காலியானார். தொடர்ந்து ஆர்ச்சரை (0) வெளியேற்றிய வருண், தனது 5வது விக்கெட்டை பெற்றார். 8.5 ஓவரில் 83/1 என வலுவாக இருந்த இங்கிலாந்து, 16வது ஓவரில் 127/8 என தத்தளித்தது. கடைசி கட்டத்தில் லிவிஸ்டன் போராடினார். பிஷ்னோய் ஓவரில் 3 சிக்சர் விளாசினார். ஹர்திக் பாண்ட்யா பந்தில் லிவிங்ஸ்டன் (43) அவுட்டானார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 171 ரன் எடுத்தது. அடில் ரஷித் (10), மார்க் உட் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய தரப்பில் வருண் 5, பாண்ட்யா 2 விக்கெட் வீழ்த்தினர். மணிக்கு 140 கி.மீ., வேகத்தில் பந்துவீசிய ஷமி, உடற்தகுதியை நிரூபித்தார்.

சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ‘டாப்-ஆர்டர்’ பேட்டர்கள் ஏமாற்றினர். சாம்சன் (3), அபிஷேக் சர்மா (24), சூர்யகுமார் (14), திலக் வர்மா (18) விரைவில் வெளியேறினர். அக்சர் படேல் (15), வாஷிங்டன் சுந்தர் (6) தாக்குப்பிடிக்கவில்லை. தனிநபராக போராடிய ஹர்திக் பாண்ட்யா (40), ஓவர்டன் பந்தில் அவுட்டாக, நம்பிக்கை தகர்ந்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 32 ரன் தேவைப்பட்டன. கார்ஸ் கலக்கலாக பந்துவீசினார். முதல் பந்தில் துருவ் ஜுரல் (2) அவுட்டானார். கடைசி பந்தில் பிஷ்னோய் ஒரு பவுண்டரி அடிக்க, 6 ரன் தான் கிடைத்தது. இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 145 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. பிஷ்னோய் (4), வருண் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஓவர்டன் 3 விக்கெட் வீழ்த்தினர். இரு அணிகள் மோதும் நான்காவது போட்டி புனேயில் வரும் 31ல் நடக்க உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.