அனைத்து இனங்களும் ஒன்றிணையும் ஒரு தேசிய திருவிழா : வல்வெட்டித்துறை மண்ணிலிந்து ஜனாதிபதி அறிவிப்பு!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அக்டோபரில் நாட்டின் அனைத்து இனக்குழுக்கள், கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் மதிப்புகளை கொண்டாடும் சிறப்பு தேசிய விழா ஒன்றை அறிவித்துள்ளார். இது அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் புதிய தேசிய விழாவாக இருக்கும் என அவர் தெரிவித்தார். அதற்காக வரவு-செலவு திட்டத்தில் நிதி ஒதுக்க முடிவு செய்யப் போவதாக அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இதுவரை மத மற்றும் கலாச்சார விழாக்கள் தனித்தனியாக கொண்டாடப்பட்டதுடன், முழு இலங்கையை ஒன்றிணைக்கும் விழா ஒன்று முன்பு இல்லையென்றும், எதிர்வரும் அக்டோபரில் அனைத்து மக்களும் ஒரே நாடாக ஒரு விழாவை , தேசிய விழாவாக கொண்டாடுவார்கள் என்றும் தெரிவித்தார்.
“தமிழர்கள், சிங்களவர்கள், பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள், முஸ்லிம்கள் – நாம் அனைவரும் ஒன்றாகக் கொண்டாடும் ஒரு நாள் நமக்குத் தேவையில்லையா? என கேள்வி எழுப்பிய ஜனாதிபதி , ஒவ்வொரு இனத்திற்கும் தனிப்பட்ட திருவிழாக்கள் உள்ளன. ஆனால் இனங்கள் அனைத்தும் இணையும் ஒரு தேசிய திருவிழாவை நாம் கொண்டாட வேண்டும்,” என்றார் அவர்.
இந்த விழாவில் மதம், கலாச்சாரம், உணவு, ஆடை, இசை, நாடகம், கவிதை போன்றவை ஒரே மேடையில் ஒன்று சேர்ந்து கொண்டாடப்படும்.
“நாம் தொலைவில் இருந்தாலும், நம் குழந்தைகளை தொலைவில் விடக் கூடாது. எங்கள் தலைமுறை போரைக் கண்டிருக்கலாம், ஆனால் எங்கள் குழந்தைகளின் தலைமுறையை மீண்டும் போருக்குள் இழுக்க அனுமதிக்க மாட்டோம். வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கின் அனைத்து குழந்தைகளும் ஒன்றிணையும் தேசமாக இலங்கையை மாற்றுவோம்” என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.