குஜராத்தில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி; 37 பேர் காயம்
குஜராத்தில் சொகுசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 37 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு பக்தர்களுடன் சென்றுக்கொண்டிருந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இன்று அதிகாலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆன்மிக சுற்றுலாவுக்குச் சென்ற பேருந்து, குஜராத் மாநிலம் டாங் மாவட்டத்திலுள்ள பள்ளத்தாக்கில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் பள்ளத்தில் கவிழ்ந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவுடன் விரைந்த காவல் துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து பேசிய காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜி. பாட்டீல், ”48 பக்தர்களுடன் சென்ற சொகுசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகளை மீறி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில் ஓட்டுநர், இரு பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
17 பேர் தீவிர காயங்களுடன் அஹ்வா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் லேசான காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நிறைவுப் பகுதியை எட்டியுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
குஜராத்தின் துவாரகா பகுதியில் இருந்து பேருந்தில் இரவு புறப்பட்ட பக்தர்கள், மகாராஷ்டிரத்தின் நாசிக் பகுதிக்குச் செல்லத்திட்டமிட்டிருந்தனர். விபத்து நடப்பதற்கு 2.5 கிலோ மீட்டருக்கு முன்பு பேருந்தை நிறுத்தி அனைவரும் தேநீர் அருந்தியுள்ளனர். பேருந்து மீண்டும் புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விபத்து நடந்துள்ளது.