அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த கனடா, மெக்சிகோ

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் மீது கடுமையான வரிவிதிப்பை அமல்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தார்.

அமெரிக்காவின் ஆகப்பெரும் வர்த்தக பங்காளிகளாக உள்ள மெக்சிகோ, கனடா மீதான இந்த நடவடிக்கை அவ்வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, டிரம்பின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவுக்கு எதிராக வரிவிதிப்பை அறிவித்துள்ளனர்.

144 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதிகள்மீது 25 விழுக்காடு வரிவிதிக்கப்போவதாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் கிட்டத்தட்ட 28 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள பொருள்களுக்கான வரிவிதிப்பு பிப்ரவரி 4 (செவ்வாய்க்கிழமை) முதல் நடப்பிற்கு வரும் என்று ட்ரூடோ கூறினார்.

மேலும், கிட்டத்தட்ட 115 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள பொருள்களுக்கான வரிவிதிப்பு 21 நாள்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அதைத்தான் அதிகம் பாதிக்கும் என்றும் திரு ட்ரூடோ கூறினார். கனடிய மக்கள் கனடாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை அதிகமாக வாங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் கனடியர்கள் அமெரிக்காவில் விடுமுறை நாள்களை கழிப்பதைவிட கனடாவில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சென்று பொருளியலை ஊக்கப்படுத்த வேண்டும் என்று ட்ரூடோ தெரிவித்தார்.

இதற்கிடையே, மெக்சிகோவின் பிரதமர் கிளாவ்டியா செயின்பவும் தன் நாட்டின் பொருளியல் அமைச்சருக்கு அமெரிக்க இறக்குமதிகள் மீது வரிவிதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிப்ரவரி 4ஆம் தேதி முதல் கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 விழுக்காடு வரிவிதிப்பதாக அறிவித்தார்.

சீனாவும் எதிர்ப்பு
இந்நிலையில், அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்து சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனா, தனது உரிமைக்கு எதிரான நடவடிக்கையை பொறுத்துக்கொள்ளாது என்றும் தெரிவித்துள்ளது.

சீனாவின் வர்த்தக அமைச்சு அமெரிக்கா குறித்து உலக வர்த்தக அமைப்பிடம் பேசவுள்ளதாகவும் அமெரிக்காவுக்கு எதிராக வழக்குத் தொடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறிவிட்டதாகவும் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்கிடையே எரிபொருள் சார்ந்த பொருள்களுக்கு எவ்வளவு வரிவிதிப்பு இருக்கும் என்று தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

இதனால் அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கலாம் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்கா நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட நான்கு மில்லியன் பேரல் எண்ணெய்யை கனடாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. மெக்சிகோவில் இருந்து 450,000 பேரல் எண்ணெய்யை அமெரிக்கா தினமும் பெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.