சீமான்- பெரியார் அமைப்பு இடையே மோதல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் சீமான் பற்றி அவதூறாக புகைப்படம் அச்சிட்டு விமர்சனம் செய்ததாகக் கூறி தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினருடன் நாம் தமிழர் கட்சியினர் மோதலில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி கட்சியினருடன் பிப்ரவரி 2ஆம் தேதி பிற்பகல் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதியில் பெரியார் பற்றி அவதூறாகப் பேசிய சீமானை கண்டிக்கும் விதமாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சீமான் புகைப்படத்தை ஒருபுறம் நாம் தமிழர் கட்சிப் போலவும் மறுபுறம் பா.ஜ.க.வின் காவி உடை அணிந்தபடி இருப்பது போலவும் சித்திரிப்பு புகைப்படம் உடைய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இதனை நாம் தமிழர் கட்சியினர் கண்டித்தனர். இதனால், இரு கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் அவர்களை அவ்விடத்தைவிட்டு செல்லும்படி கூறினர்.
தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் பெரியாரும் எதிரான கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.
இந்த மோதலின் காரணமாக அவ்விடத்தில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர்.