ஏர் இந்தியா சலுகை விலையில் விமானப் பயணச்சீட்டு அறிவிப்பு.
ஏர் இந்தியா விமான நிறுவனம், ‘நமஸ்தே வோர்ல்ட்’ எனும் விற்பனைத் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) அறிவித்தது. இந்தியாவில் எதிர்வரும் விடுமுறைக் காலத்தை முன்னிட்டு உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணப் பாதைகளில் சலுகை விலையில் விமானப் பயணச்சீட்டுகளை ஏர் இந்தியா வழங்குகிறது.
பிப்ரவரி 2 ஞாயிற்றுக்கிழமை முதல் பிப்ரவரி 6 வரை செய்யப்படும் முன்பதிவுகளுக்கு இந்த விற்பனை பொருந்தும். அதன்படி, பிப்ரவரி 12 முதல் அக்டோபர் 31 வரை பயணம் செய்யலாம்.
ஒருவழி உள்நாட்டுப் பயணத்துக்கான விமானப் பயணச்சீட்டுகளின் விலை ரூ.1,499ல் தொடங்குகிறது. இருவழி வெளிநாட்டுப் பயண விமானப் பயணச்சீட்டுகளின் விலை ரூ.12,577ல் தொடங்குகிறது. இக்கானமி, பிரிமியம் இக்கானமி, பிஸ்னஸ் கிளாஸ் பிரிவுகளுக்கு இந்த விலைச் சலுகைகள் பொருந்தும்.
இந்த விற்பனை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) ஏர் இந்தியாவின் இணையப்பக்கத்திலும் கைப்பேசிச் செயலியிலும் மட்டுமே கிடைக்கப்பெறும். திங்கட்கிழமை (பிப்ரவரி 3) முதல் ஏர் இந்தியாவின் பயணச்சீட்டு விற்பனை அலுவலகங்கள், வாடிக்கையாளர் தொடர்பு நிலையம், பயண முகவைகள் உள்ளிட்ட இதர தளங்களில் விற்பனை இடம்பெறும்.
‘நமஸ்தே வோர்ல்ட்’ விற்பனையின்கீழ் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், தேர்ந்தெடுக்கப்பட்ட பயணப் பாதைகளில் இது ‘முதலில் வருவோருக்கு முதலில் சேவை’ என்ற அடிப்படையில் விலைச் சலுகை கிடைக்கும் என்று ஏர் இந்தியா கூறியது.