உக்ரேனில் உயிரிழந்த வடகொரிய வீரரின் உடமையில் சாம்சுங் கைப்பேசி : அதில் கிம்மின் வாழ்த்து.
ரஷ்யப் படைகளுடன் சேர்ந்து சண்டையிட்டபோது, உக்ரேனியப் படைகளால் கொல்லப்பட்ட வடகொரிய ராணுவ வீரர் ஒருவரின் உடைமைகளில் சாம்சுங் கைப்பேசி ஒன்று கண்டறியப்பட்டதாக உக்ரேனிய ராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் மேற்குப் பகுதியான கர்ஸ்க்கில் உக்ரேனிய சிறப்புச் செயல்பாட்டுப் படை நடத்திய திடீர் தாக்குதலில் வடகொரிய ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாக ஜனவரி 28ஆம் தேதி ஃபேஸ்புக்கில் அப்படை தெரிவித்தது.
கொல்லப்பட்ட வடகொரிய வீரர்களிடமிருந்து மீட்கப்பட்ட பொருள்களை அப்படை வெளியிட்ட புகைப்படங்கள் காண்பித்தன. அவற்றில், சாம்சுங் 2ஜி வகையைப்போல தெரிந்த கைப்பேசி ஒன்றும் அடங்கும்.
உக்ரேனிய வாசகங்கள் அடங்கிய அச்சிடப்பட்ட தாள்களும் இதர பொருள்களில் அடங்கும். ‘ஆயுதங்களைக் கீழே போடவும்’, ‘உடைகளை அகற்றவும்’ போன்ற உக்ரேனிய வாசகங்கள் கொரிய மொழியில் இடம்பெற்றிருந்தன. உக்ரேனிய வீரர்களைச் சிறைபிடிக்கும்போது பயன்படுத்தப்படுவதற்காக அவை வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
புரியாத்தியா குடியரசு (Republic of Buryatia) கடப்பிதழ் ஒன்றுடன், கள வீரர்களுக்கு வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் புத்தாண்டுச் செய்தி அடங்கிய கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
வீரர்களின் முயற்சிகளுக்காக கடிதத்தில் அவர்களைப் பாராட்டிய கிம், “நீங்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் பாதுகாப்பாகத் திரும்ப வேண்டும் என நான் தொடர்ந்து பிரார்த்திக்கிறேன் என்பதை தயவுசெய்து ஒரு நொடியும் மறவாதீர்கள்,” என எழுதியிருந்தார்.