கேரளத்தில் விடுதி அறையில் கல்லூரி மாணவி தற்கொலை!
கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
கோட்டயத்தின் பரம்புழாவைச் சேர்ந்த அனீட்டா பினாய் (வயது 21), இவரது பெற்றோர் இருவரும் வெளி நாட்டில் வசித்து வருவதாகக் கூறப்படும் நிலையில் அனீட்டா பெரும்பாவூரிலுள்ள கல்லூரியில் இறுதியாண்டு பிபிஏ பயின்று வந்துள்ளார்.
வார இறுதியை முன்னிட்டு வீட்டிற்கு சென்ற அவர் நேற்று (பிப்.2) அவரது விடுதிக்கு திரும்பியுள்ளார். அவருடன் அறையில் வசிக்கும் மற்ற மாணவிகளும் அவர்களது வீடுகளுக்கு சென்றிருந்ததினால், அனீட்டா மட்டும் தனியாக தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில், இன்று (பிப்.3) காலை 7 மணியளவில் அவரது விடுதி அறையிலுள்ள ஜன்னல் கம்பியில் அனீட்டா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்த குறுப்பம்படி காவல் துறையினர் தங்களது விசாரணையைத் துவங்கியுள்ளனர். அப்போது, அவரது அறையில் தனது பெற்றோருக்கு எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அனீட்டாவின் மரணம் தற்கொலை தான் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.