அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி மனு!
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்ற செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இதன் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுதாரர் தனது மனுவில், பிரதிவாதி ஆனந்த விஜேபால கடந்த நவம்பர் 18 ஆம் தேதி ஜனாதிபதியால் பொது பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், டிசம்பர் 10 ஆம் தேதி வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகை ஆனந்த விஜேபால ஜனாதிபதியின் பணிக்குழாமின் பிரதானியாக நியமிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்ததாகவும், அதில் அமைச்சர் ஆனந்த விஜேபால ஜனாதிபதியின் பணிக்குழாமின் பிரதானியாக நியமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 91வது பிரிவின் கீழ், அரசு பணியில் இருப்பவர் நாடாளுமன்றத்தில் அமரவும் வாக்களிக்கவும் தகுதியற்றவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறுகிறார்.
ஜனாதிபதியின் பணிக்குழாமின் பிரதானி அரசு பதவி என்று சுட்டிக்காட்டும் மனுதாரர், அத்தகைய பதவியை வகித்துக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு தகுதி இல்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அரசியலமைப்பின்படி ஆனந்த விஜேபால அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்று தீர்மானித்து அவரது உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
மேலும், இந்த மனுவை விசாரித்து இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை ஆனந்த விஜேபால நாடாளுமன்ற உறுப்பினராக அமர்வதையும், நாடாளுமன்றத்தில் வாக்களிப்பதையும் தடுத்து இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் ஆனந்த விஜேபால பொது பாதுகாப்பு அமைச்சராக செயற்படவும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.