சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை ராணுவ விமானத்தில் நாடு கடத்திய அமெரிக்கா!
சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்காவின் ராணுவ விமானம் புறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடிபெயர்ந்த லட்சக்கணக்கானவர்களை சொந்த நாடுகளுக்கு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டு வருகின்றது.
அமெரிக்கா்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும், சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்படும், பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது ஆகிய முக்கிய வாக்குறுதிகளை தோ்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் முன்வைத்தாா்.
இந்நிலையில், பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டவரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவது ரத்து உள்பட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 12 உத்தரவுகளில் 47-ஆவது அதிபராகப் பதவியேற்ற அதிபா் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை கையொப்பமிட்டாா்.
டிரம்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் சட்டவிரோத குடியேறிகளாகி உள்ளனா். இதில் இந்தியா்களின் எண்ணிக்கை 18,000-க்கும் அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இவர்களை திரும்ப அனுப்பும் முடிவை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் ஏற்றுக் கொண்டது.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து 200-க்கும் மேற்பட்ட இந்தியர்களை சி-17 ரக ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.
அவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தில்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி செய்தியாளர்களுடன் பேசுகையில்,
”அமெரிக்க அரசு தனது எல்லையை பாதுகாக்கும் நடவடிக்கையில் தீவிரமாக உள்ளது. குடியேற்றச் சட்டங்களை தீவிரமாக அமல்படுத்தி, சட்டவிரோதமாக குடியேறிவர்களை வெளியேற்றி வருகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ள சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் எவ்வித அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.