நாவலப்பிட்டியில் மனைவியை கொலை செய்த கணவன் பொலிஸில் சரண்
கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவர் இன்று (04) காலை நாவலப்பிட்டி பொலிஸில் சரணடைந்துள்ளார்.
நாவலப்பிட்டியில் உள்ள செம்ரோக் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான கயானி தில்ருக்ஷி குமாரி என்ற பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் கொழும்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த நிலையில், நேற்று (03) நாவலப்பிட்டியில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு தான நிகழ்வொன்றில் பங்கேற்கச் சென்றிருந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில், சந்தேக நபர் கீழ் தளத்தின் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் இரகசியமாக நுழைந்து, அறையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார்.
இதன்போது, கொலையாளியிடம் இருந்து தப்பிக்க குறித்த பெண் வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் மகள் கூறுகையில், வீட்டை விட்டு வெளியே ஓடிய தனது தாயை தனது தந்தை துரத்திச் சென்று, வீட்டிற்கு வெளியே வைத்து மீண்டும் கத்தியால் குத்தி, கல் ஒன்றால் தலையில் தாக்கியதாக தெரிவித்தார்.
தாயைக் காப்பாற்றச் சென்ற மகள் காயமடைந்ததாகவும், குடும்பத் தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணும் , கணவரும் சிறிது காலமாகப் பிரிந்து வாழ்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
நாவலப்பிட்டி நீதவானின் பரிசோதனைக்குப் பிறகு, சடலம் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.