76 ஆண்டு சுதந்திரத்திற்குப் பின் : இலங்கையின் இருண்ட எதிர்காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உண்மையான திறன்
சுதந்திரத்திற்குப் பின் 76 ஆண்டுகளில் இலங்கை ஒரு பெரிய அரசியல் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. தோழர் அனுர குமார திசாநாயக்க சகோதரரின் தலைமையில் தேசிய மக்கள் சக்தி (NPP) 2024 தேர்தலில் ஒரு சிறந்த வெற்றியைப் பெற்றது, முந்தைய ஊழல் மற்றும் சர்வாதிகார குடும்ப ஆட்சியில் இருந்து ஒரு மாற்றத்தைக் குறித்தது. இந்த முடிவு, மாற்றத்திற்கான மக்கள் ஆதரவைத் திரட்டிய 2022 அரகலய போராட்ட இயக்கத்தின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கிறது. நிலையற்ற தன்மைக்குத் திரும்புவதைத் தடுக்க நீண்ட கால சீர்திருத்தங்களை பராமரிக்கும் அதே வேளையில், வாழ்க்கைச் செலவு, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அவசர சமூக-பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்கும் சவாலை NPP இப்போது எதிர்கொள்கிறது.
அதிகாரத்தைப் பிடிக்க கடந்த தலைவர்கள் மீண்டும் மீண்டும் முயன்றாலும், ஜனநாயக வழிகளில் சர்வாதிகாரத்தை எதிர்ப்பதற்கான வரலாறு இலங்கைக்கு உண்டு. 2022 அரகலய இயக்கம் அரசு ஒடுக்குமுறைக்கு வெற்றிகரமாக எதிர்ப்புத் தெரிவித்தது. அண்மைய தேர்தல் ஜனநாயக ஆட்சிக்கு வலுவான மக்கள் ஆணையை வழங்கியுள்ளது. இருப்பினும், அரசியல் சூழ்ச்சிகள், வெகுஜன பிரச்சாரங்கள் மற்றும் அரங்கேற்றப்பட்ட வன்முறை மூலம் பழைய ஆட்சியின் எச்சங்கள் மீண்டும் எழ முயற்சிக்கக்கூடும். எனவே, பொதுமக்களின் தொடர்பைத் தொடர்ந்து பராமரிப்பது மிகவும் முக்கியம்.
புதிய அரசாங்கமும் சவால்களும்
முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கணிசமான எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சற்று அதிகரித்த பெண் பிரதிநிதித்துவத்தையும் கொண்ட புதிய நாடாளுமன்றம் குறிப்பிடத்தக்க அளவில் வித்தியாசமானது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கில் NPP பெற்ற தேர்தல் வெற்றி தேசிய ஒற்றுமைக்கான விருப்பத்தைக் காட்டுகிறது. இருப்பினும், முக்கிய இனப் பிரச்சினைகள் தொடர்பாக NPP இன் நிலைப்பாடு தெளிவாக இல்லை. புதிய அரசியலமைப்பு மற்றும் நியாயமான ஆட்சிக்கு NPP உறுதியளித்திருந்தாலும், கூட்டாட்சி முறை மற்றும் கடந்தகால போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு அது எதிர்ப்புத் தெரிவிக்கிறது. இராணுவத்திற்கு தொடர்ந்து முன்னுரிமை அளிப்பது மற்றும் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் அணுகுமுறை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த அணுகுமுறை நல்லிணக்க நடவடிக்கைக்கு மிகவும் முக்கியமானது.
உலகளவில், பெரும்பாலும் ஆழமாக வேரூன்றிய அதிகார கட்டமைப்புகளின் எதிர்ப்பை எதிர்கொண்டு முற்போக்கான அரசாங்கங்கள் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ளன. காங்கோவில் பாட்ரிஸ் லுமும்பா, இந்தோனேசியாவில் சுகர்னோ மற்றும் சிலியில் சல்வடார் அலெண்டே போன்ற முற்போக்கான தலைவர்கள் மற்றும் தொடர்புடைய வரலாற்று நிகழ்வுகள், வெளிப்புற மற்றும் உள்நாட்டு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தீவிர சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் உள்ள சிரமத்தை எடுத்துக்காட்டுகின்றன. இத்தகைய கண்ணிகளில் இருந்து தப்பிக்க, இலங்கையின் புதிய தலைமை இந்த வரலாற்று பாடங்களிலிருந்து அனுபவத்தைப் பெற வேண்டும்.
NPP இன் வெற்றி மிகவும் ஜனநாயக மற்றும் நியாயமான இலங்கைக்கு இருக்கும் நம்பிக்கையின் அடையாளமாக இருந்தாலும், நீண்ட கால ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் அதே வேளையில் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது கடினமான பணியாக இருக்கும். மிகவும் சமத்துவமான எதிர்காலத்தை நோக்கி நாட்டை வழிநடத்த பொதுமக்களின் தொடர்ச்சியான பங்கேற்பு, பொறுப்புள்ள ஆட்சி மற்றும் கவனமான அரசியல் சூழ்ச்சி மிகவும் முக்கியமானது.
மக்கள் ஆணை மற்றும் எதிர்கால வளர்ச்சி
புதிய அரசாங்கம் நாட்டின் பல்வேறு மக்கள்தொகையுடன் எவ்வளவு நன்றாகத் தொடர்பு கொள்கிறது, பங்குதாரர்களிடமிருந்து ஆலோசனை பெறுகிறதா, ஜனநாயகக் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறதா என்பதைப் பொறுத்தே இலங்கையின் எதிர்காலம் உள்ளது. நாடு திவால் நிலையில் இருந்து படிப்படியாக மீண்டு வந்தாலும், இன்னும் சர்வதேச நிதி அழுத்தத்தின் கீழ் உள்ளது. முந்தைய ஆட்சிகளைப் போலல்லாமல், NPP அதிக அதிகாரங்களைக் கோரவில்லை. அதற்கு பதிலாக சமூக-பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
அரசாங்கத்தின் சுத்தமான இலங்கை (Clean Sri Lanka) முன்முயற்சி வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும். சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகம் தொடர்பான சீர்திருத்தங்களை இலக்காகக் கொண்ட ஒரு விரிவான திட்டம் மூலம் நாட்டை மாற்றுவதற்கும் புத்துயிர் பெறுவதற்கும் நம்பிக்கைக்குரிய இலக்குகளைக் கொண்டுள்ளது. இது முறையாகச் செயல்படுத்தப்பட்டால், கிராமப்புற வறுமையை ஒழித்தல், சுற்றுச்சூழல் தூய்மையை மேம்படுத்துதல், டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் நல்லாட்சியை உறுதி செய்தல் ஆகியவற்றைச் சாதிக்க முடியும்.
சுத்தமான இலங்கை
பொது இடங்களைப் பராமரிப்பதில், குப்பைகளை நிர்வகிப்பதில் மற்றும் சமூகம் முழுவதும் அறநெறி கோட்பாடுகளை மேம்படுத்துவதில் சமூக பங்கேற்பின் முக்கியத்துவத்தை இந்த முயற்சி வலியுறுத்துகிறது. நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கி நாட்டின் படிப்படியான மாற்றத்தை ஊக்குவிக்கும் சுத்தமான இலங்கை திட்டம், உண்மையில் புதிய மதிப்புகள் மற்றும் கொள்கைகளின் அமைப்பாகும்.
சவால்களும் சீர்திருத்தங்களும்
சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள வெட்டுக்கள், போராட்டங்களை ஒடுக்குதல் மற்றும் அரசியல் ஆதரவால் குறிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலத்தில் அவர் சென்ற பாதையை NPP வெறுமனே பின்பற்றி வருவதாக எதிர்க்கட்சி கூறுகிறது. அவர் தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதியாக இருந்தார். அவரது ஆட்சி அரசு துறையின் திறனை மேம்படுத்துவதில் தோல்வியடைந்தது; பொருளாதார கஷ்டங்களை அதிகப்படுத்தியது; ஊழலை மூடிமறைத்தது.
அவரது கொள்கைகள் ஆளும் உயரடுக்கினருக்கான ஆடம்பர சலுகைகளை பராமரித்தன. அதே சமயம் வேலை இழப்புகள், பொது மக்களின் சுமையை அதிகரித்தது மற்றும் தனியார்மயமாக்கலின் தோல்வியுற்ற முயற்சிகளுக்கு வழிவகுத்தது. ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் தலைமை மிகவும் சர்ச்சைக்குரியதாக மாறியது. அவரது நிர்வாகம் மனித உரிமைகளை நசுக்கிய மற்றும் ஊழலுக்கு தீர்வு காணத் தவறிய கொள்கைகளையும் செயல்படுத்தியது.
இதற்கு மாறாக, NPP அரசாங்கம் ஒரு சோசலிச புரட்சியை விட ஜனநாயக இயக்கத்தின் மூலம் ஆட்சிக்கு வந்தது. அத்தியாவசிய சேவைகளின் பொது உரிமையை பராமரிக்கும் அதே வேளையில், NPP அரசாங்கம் ஒழுங்குபடுத்தப்பட்ட தனியார் துறையின் வளர்ச்சி, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் தாராள வர்த்தகத்தை ஆதரிக்கிறது. இருப்பினும், NPP யால் கொடுக்கப்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) ரத்து செய்யப்பட்டு, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா என்ற கவலைகள் இன்னும் உள்ளன. இருப்பினும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை சீர்திருத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
சவால்கள் மற்றும் சீர்திருத்தங்கள்
அதன் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலைப் பொருட்படுத்தாமல், NPP அரசாங்கம் குறிப்பிடத்தக்க தடைகளை எதிர்கொண்டுள்ளது. இராணுவம் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்குச் சொந்தமான நிலங்களை தொடர்ந்து கையகப்படுத்தி வருகிறது. இருப்பினும், புதிதாக நிறுவப்பட்ட தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒரு சாதகமான வளர்ச்சியாகும்.
NPP ஏழைகள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமையை குறைக்க, முக்கிய அரசு நிறுவனங்களின் பொது உரிமையை பராமரிக்க மற்றும் அரசாங்கத்தின் செலவுகளை தெளிவுபடுத்த விரும்புகிறது. நிதி ஸ்திரத்தன்மையை அடைய ஏற்றுமதியை அதிகரிக்கவும், இறக்குமதியை குறைக்கவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் முயற்சிக்கிறது. இருப்பினும், பொறுப்பேற்பது, விமர்சகர்களை அமைதிப்படுத்துவது மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் முடிவெடுப்பது அவசியம். பாகுபாடு கொள்கைகள் மற்றும் சில அதிகாரத்துவ நடைமுறைகளைத் தொடர்ந்து பராமரிப்பது, மாற்றத்திற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பற்றிய சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடும்.
NPP வாக்காளர்கள் ஊழலை ஒழிக்கும், ஜனநாயகத்தை மேம்படுத்தும் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் ஒரு ஆட்சி மாதிரியை எதிர்பார்க்கின்றனர். சுதந்திரத்திற்குப் பின் மிகவும் அமைதியான தேர்தலை நடத்தி, புதிய நிர்வாகம் பாரம்பரிய அரசியல் உயரடுக்கிலிருந்து விலகிச் சென்றுள்ளது. இருப்பினும், குறிப்பாக மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பாக NPP அளித்த வாக்குறுதிகளை முழுமையாகச் செயல்படுத்துவதற்கான அதன் திறன் மூலம் அதன் செயல்திறன் தீர்மானிக்கப்படும்.
NPP தன்னை நியோலிபரலிசத்திலிருந்து விலக்கிக் கொள்ள முயன்றாலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வெட்டு நடவடிக்கைகளை அது முழுமையாக எதிர்க்கவில்லை. பொருளாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதோடு இந்த வெட்டு நடவடிக்கைகளின் தாக்கத்தை குறைப்பதில் அதன் மூலோபாயம் கவனம் செலுத்துகிறது. அரசாங்கம் நிதி கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதற்கும் சமூக நலனை உறுதி செய்வதற்கும் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும். வரி வருவாயை அதிகரிப்பது, வர்த்தக பற்றாக்குறையை நிர்வகிப்பது மற்றும் ஊழலை ஒழிப்பது, சமூக ஜனநாயக கட்டமைப்பிற்குள் நிலையான வளர்ச்சியை அடைவதில் முக்கியமானது.
இலங்கை தனது 77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், NPP அரசாங்கத்தின் வெற்றி, ஜனநாயகக் கோட்பாடுகள், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சமூக நீதிக்கு உறுதியளிப்பதற்கான அதன் திறனைப் பொறுத்தது. NPP அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களுக்கு உண்மையிலேயே சேவை செய்யும் ஒரு புதிய ஆட்சி சகாப்தத்தை உருவாக்க முடியுமா என்பதை காலம் மட்டுமே தீர்மானிக்கும்.
பொருளாதார நெருக்கடி பற்றி கலாநிதி லயனல் போபகேவின் பகுப்பாய்வு – (முதல் பகுதி) கலாநிதி லயனல் போபகே
சமூக மற்றும் அரசியல் ஆய்வாளர்
(ஜேவிபியின் முன்னாள் செயலாளர்)
தமிழில் : ஜீவன்