ஹினிதும மூன்று கொலைகளுக்கு முன்னாள் அமைச்சரின் செயலாளர் கைது.

ஹினிதும, பனங்கல பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த 30ம் தேதி இரவு நடந்த மூன்று கொலைகள் தொடர்பாக, தவலம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், முந்தைய அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளராக இருந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் பிரியந்த ஜயதிலக என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்.

கடந்த 30ம் தேதி இரவு 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ரி.56 துப்பாக்கியால் சுட்டு ஹினிதும மகாபோதிவத்தையைச் சேர்ந்த திசாரா கெஸ்ட் ஹவுஸ் உரிமையாளர் பி.டபிள்யூ.டி. இந்துனில் சமன் குமார (55), படபொல நாமல் செவனத்தைச் சேர்ந்த எஸ்.எம். நெவில் (34) மற்றும் ஹினிதும வடக்கு நவதிமுல்லைச் சேர்ந்த சதுரங்க குமார படகோட (39) ஆகிய மூன்று பேரைக் கொலை செய்துள்ளனர்.

இவர்கள் மேலும் இரண்டு பேருடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அப்போது இருவர் தப்பி ஓடி உயிர் பிழைத்துள்ளனர்.

உயிர் தப்பிய இருவரிடமும் பொலிஸார் நீண்ட நேரம் விசாரணை நடத்தி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் பணத் தகராறு என்று கூறப்பட்டாலும், பின்னர் வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கரந்தெனிய சுத்தா என்பவரின் அறிவுறுத்தலின் பேரில், கொல்லப்பட்ட மூவரில் நெவில் என்பவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

நெவில் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையின் உளவுப் பிரிவின் தலைவராக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் ஈ.எஸ் தர்மப்பிரியவின் உளவாளி என்றும், நெவிலுக்கு முன்பும் மிரட்டல்கள் வந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

தற்போது ஏழு சிறப்பு பொலிஸ் குழுக்கள் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை நடத்தி வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.