கைப்பேசி கழிப்பறையிலும் வேண்டாம்!
வாழ்வின் எல்லா அங்கங்களிலும் திறன்பேசி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், திறன்பேசி, ‘ஐபேடு’ போன்ற மின்னணுக் கருவிகளைக் கழிப்பறைக்கும் எடுத்துச் செல்லும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
கழிப்பறையில் அமர்ந்தபடி மின்னஞ்சல் படிப்பது, சமூக ஊடகங்களில் காணொளிகள் பார்ப்பது, விளையாடுவது உள்ளிட்டவை பரவலான நிகழ்வாகியுள்ளது.
இது சாதாரணமாகத் தோன்றினாலும், உடல்நலக் கோளாறுகள், மனநலச் சிக்கல், தோற்றப் பாங்கு உள்ளிட்ட பலவகை பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கிருமித் தொற்று
குளியலறை, கழிப்பறைகளில் திறன்பேசிகளைப் பயன்படுத்துவது சுகாதார அபாயங்களை ஏற்படுத்தலாம். ஈ.கோலை, சால்மோனெல்லா, ஸ்ட்ரெப்டோகாக்கஸ் என நோய் விளைவிக்கும் பல்வேறு நுண்கிருமிகள் அவ்விடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன.
இந்த நுண்ணுயிரிகள் குளியலறையின் ஈரமான சூழலில் செழித்து வளரும் தன்மை கொண்டவை. எனவே, அவை அங்குள்ள மேற்பரப்புகளை எளிதில் மாசுபடுத்தும்.
அங்கு எடுத்துச் சென்றபின் திறன்பேசியை அப்படியே தொட்டுப் பயன்படுத்துவதும், முகம், காது, வாய்ப் பகுதியைத் தொடுவதும் இரைப்பை, குடல், சுவாசப் பிரச்சினைகள் முதல் பல தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கலாம்.
அமரும் தோரணை மாறலாம்
கழிப்பறையில் அமர்ந்திருக்கும்போது, திறன்பேசிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது உடல்வலி, தோரணைச் சிக்கலுக்கு வழிவகுக்கும்.
பெரும்பாலானோர் திறன்பேசிகளை நோக்கிக் குனிந்து, தோள்களைத் தளர்த்தி, கழுத்தைச் சாய்த்து வைத்துப் பயன்படுத்துகின்றனர். இந்த நிலை கழுத்து, தோள்கள், முதுகுப்புறங்களில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது ‘டெக்ஸ்ட் நெக்’ எனப்படும் வளைந்த கழுத்து ஏற்படக் காரணமாக அமையலாம்.
காலப்போக்கில் அது தலைவலி, முதுகுத்தண்டுப் பிரச்சினை உள்ளிட்டவற்றை ஏற்படுத்தலாம்.
மன அழுத்தம், பதற்றம்
பணியிட மின்னஞ்சல்கள், தகவல்களைப் பார்ப்பது, உடலில் கவனம் செலுத்தாமல் மூளையை விழிப்புடன் வைத்திருப்பது பதற்றம் ஏற்படுத்தி, மன அழுத்தத்திற்குப் பங்களிக்கும்.
எதிர்மறையான செய்திகளைப் பார்ப்பது, நேரம் போவதறியாது அதிக நேரம் அமர்ந்திருப்பது உள்ளிட்டவையும் மன அமைதியைக் கெடுக்கும்.
வெளியுலகத்திலிருந்து துண்டிக்கக்கூடிய சில நேரங்களில் ஒன்றான கழிப்பறையில் செலவிடும் நேரத்திலும் திறன்பேசியின் ஊடுருவல் மன ஓய்வுக்கான வாய்ப்பை அழிக்கிறது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
செரிமானக் குறைபாடு
கழிப்பறையில் திறன்பேசி பயன்படுத்துவதன் முக்கியத் தாக்கம் செரிமான மண்டல பாதிப்பு. நீண்ட நேரம் கழிப்பறையில் அமர்ந்திருப்பது, உடலின் குடல் பகுதிகளில் அதிக அழுத்தம் அளித்து அதன்மூலம் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கும் வழிவகுக்கிறது.
தொலைபேசியில் கவனம் செலுத்தும்போது, உடல் தரும் சமிக்ஞைகளில் கவனம் செலுத்தாமல் போகும் வாய்ப்புள்ளது. இது காலப்போக்கில் முழுமையற்ற குடல் இயக்கங்களுக்கு வழிவகுக்கலாம்.
தூக்கச் சுழற்சி பாதிப்பு
இப்பழக்கம் தூக்கச் சுழற்சி முறைகளில் மறைமுகத் தாக்கத்தை ஏற்படுத்தும். உறங்குவதற்குமுன் நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்து தொலைபேசி பயன்படுத்துவது தூக்கத்தின் ஒட்டுமொத்த தரத்தைக் குறைக்கும்.