மன்னாரில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பறவைகள் மற்றும் அணில்களுடன் 4 பேர் கைது!
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-05-at-21.12.12_4cdf0f7f.jpg)
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக மன்னாருக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு கிளிகள், அணில்கள் மற்றும் ஏராளமான விலங்குகளுடன் நான்கு சந்தேக நபர்களை கடற்படை (04) மன்னார் கரிசாலைப் பகுதியில் கைது செய்துள்ளது.
பறவைகள் உட்பட விலங்குகளை கூண்டுகளில் அடைத்து வேன் ஒன்றில் ஏற்றப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற கடற்படையினர் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரித்தபோது, சந்தேக நபர்கள் அந்த விலங்குகள் குறித்து சரியான தகவல்களை வழங்கத் தவறியுள்ளனர்.
இது குறித்து மன்னார் பொலிஸ் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி, சம்பவ இடத்திற்கு அதிகாரிகளை வரவழைத்து மேற்கொண்ட விசாரணையில், இந்தியாவிலிருந்து மீன்பிடிப் படகில் இந்த விலங்குகள் மன்னாருக்கு கொண்டுவரப்பட்டது தெரியவந்துள்ளது.
மன்னாரில் உள்ள வர்த்தகருக்கு விற்பனை செய்வதற்காக இந்த விலங்குகளைக் கொண்டு செல்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அந்த கூண்டுகளில் 225 ஆப்பிரிக்க புறாக்கள், 25 ஆப்பிரிக்க கிளிகள், 8 வெளிநாட்டு அணில்கள் மற்றும் 13 பல்வேறு வகையான பறவைகள் மற்றும் பறவைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
சந்தேக நபர்கள் மற்றும் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட விலங்குகள் மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மன்னார் பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.