தந்தையும் மகனும் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியான முன்னாள் காவல்துறை அதிகாரி தூக்கிலிடப்பட்டார்

சிங்க‌ப்பூர் , கோவனில் கடந்த 2013ஆம் ஆண்டு தந்தையும் மகனும் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியான முன்னாள் காவல்துறை அதிகாரி புதன்கிழமை (பிப்ரவரி 5) தூக்கிலிடப்பட்டார்.

இதனை சிங்கப்பூர் காவல்துறை அறிவித்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இஸ்கந்தர் ரஹ்மத், 46, என்னும் அந்த குற்றவாளி அதிபரிடம் சமர்ப்பித்த கருணை மனு நிராகரிக்கப்பட்டதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

ஹில்சைட் டிரைவ் டிரைவ்வில் உள்ள வீட்டில் டான் பூன் சின், 67, என்பவரும் அவரின் மூத்த மகன் டான் சீ ஹியோங், 42, என்பவரும் 2013 ஜூலை 10ஆம் தேதி பிற்பகலில் கொல்லப்பட்டனர்.

அந்தச் சம்பவத்தில் இஸ்கந்தர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு 2015 டிசம்பர் 4ஆம் தேதி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவரது மேல்முறையீட்டு மனு கடந்த 2017 பிப்ரவரி 3ஆம் தேதி, இஸ்கந்தரின் 38வது பிறந்தநாளில் நிராகரிக்கப்பட்டது.

சட்டத்திற்கு உட்பட்ட முழுமையான நடைமுறைகள் அவரது வழக்கில் பின்பற்றப்பட்டதாகவும் நீதிமன்ற விசாரணையிலும் மேல்முறையீட்டு மனு விசாரணையிலும் சட்ட ஆலோசகர்களின் பிரதிநிதித்துவம் அவருக்கு வழங்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

“கொலை உட்பட மிகவும் கொடூரமான குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது,” என்றும் அது குறிப்பிட்டது.

சம்பவம் நிகழ்ந்தபோது இஸ்கந்தருக்கு 34 வயது. அப்போது காவல்துறை அதிகாரியாக அவர் இருந்தார்.

67 வயதான டான் பூன் சின்னின் வீட்டுப் பணப்பெட்டியில் அதிகமான ரொக்கப் பணம் இருந்ததை காவல்துறையில் அளிக்கப்பட்ட புகார் ஒன்றில் இருந்து இஸ்கந்தர் தெரிந்துகொண்டார்.

2013 ஜூலை 10ஆம் தேதி டான் பூன் சின்னைத் தொடர்புகொண்ட அவர், பாதுகாப்பு கேமரா பொருத்துவதற்கு வசதியாக பணப்பெட்டியில் உள்ள ரொக்கப் பணத்தை வெளியே எடுக்குமாறு வற்புறுத்தினார்.

பின்னர் அவருடன் அவரது ஹில்சைட் டிரைவ் வீட்டுக்குச் சென்ற இஸ்கந்தர், அங்கு வைத்து அந்த முதியவரை ஆயுதத்தால் 27 முறை வெட்டினார், குத்தினார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த அவரது 42 வயது மகனையும் அவர் குத்தினார்.

பின்னர் மகனை தமது காரில் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றார். அதனால் சாலையில் ரத்தத் தடயங்கள் ஏற்பட்டன.

இரண்டு நாள்களுக்குப் பின்னர் அவர் சிங்கப்பூரைவிட்டு தப்பி ஓடினார். 54 மணி நேர தேடலுக்குப் பின்னர் ஜோகூர் பாருவில் இருந்த கடலுணவுக் கடையில் இஸ்கந்தர் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் இரு கொலைகளிலும் அவர் குற்றவாளி என்று 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.