அஹிம்சா விக்கிரமதுங்கின் கடிதம் – இலங்கை அதிபருக்கு புதிய சவால்
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250206-WA0020.jpg)
கொழும்பு, 06 பெப்ரவரி 2025
சிற்றிதழ் ஆசிரியரும், ஊடகவியலாளருமான லசந்தா விக்கிரமதுங்கின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்க, இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவிற்கு எழுதிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கடிதத்தில், லசந்தா விக்கிரமதுங்கின் கொலை வழக்கில் பெரும் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாகவும், குற்றவாளிகள் சட்டத்தால் பாதுகாக்கப்படுவதாகவும் அவர் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அதில், சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
வழக்கில் அதிகார வர்க்கத்தின் தொடர்பு?
அஹிம்சா விக்கிரமதுங்க தனது கடிதத்தில், 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி நடந்த அவரது தந்தையின் கொலை சம்பவம் தொடர்பாக 2015 முதல் 2019 வரை நடந்த விசாரணைகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் கூறியுள்ளார். அந்த காலக்கட்டத்தில், குற்றம் செய்தவர்களை விசாரிக்க சி.ஐ.டி. (CID) தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தது. ஆனால், தற்போதைய சட்டமா அதிபர் இதனை மறைத்து, முக்கியமான ஆதாரங்களை நிராகரித்து வழக்கை மூடிவைக்க முயற்சி செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சாட்சியங்களை அழித்த சம்பவம்
வழக்கின் முக்கிய ஆவணங்களில் ஒன்று லசந்தாவின் நோட்புக் (Field Notebook) ஆகும். இது அவரது காரின் முன்புற இருக்கையில் இரத்தத்தால் போர்த்தப்பட்டு கிடந்தது. இதில் இரண்டு மோட்டார் சைக்கிள்களின் எண்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனால், இந்த நோட்புக் பின்னர் காவல்துறையால் மறைக்கப்பட்டது. இந்த ஆவணத்தை கல்கீசை காவல்துறையின் இன்ஸ்பெக்டர் சுகதபால கண்டுபிடித்து பதிவு செய்திருந்தார். ஆனால், சிறப்பு காவல் துறை அதிகாரி பிரசன்ன நாணயக்கார அவரை அழைத்து இந்த ஆவணங்களை அழிக்கும்படி கட்டளையிட்டதாகவும், அவர் அந்த ஆவணங்களை புகைப்படம் எடுத்து மறைத்து வைத்திருந்ததாகவும் அஹிம்சா விக்கிரமதுங்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு?
சமீபத்தில், சந்தேகநபர்களான பிரேமாநந்த உடலகம மற்றும் பிரசண்ண நாணயக்கார ஆகியோரின் மீது உள்ள வழக்குகளை சட்டமா அதிபர் திருப்பி அனுப்பியதன் மூலம், உண்மை வெளிவரவிடாமல் செய்ய முயற்சி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது நீதியை தேடி வரும் மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி
இந்த கடிதம் வெளியாகிய பிறகு, அரசியல்சார் மற்றும் நீதித்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரியா இதற்கு எவ்வாறு பதிலளிக்க உள்ளார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், நியாயம் கிடைக்க வேண்டுமென பல மனித உரிமை அமைப்புகள் தற்போது குரல் கொடுத்து வருகின்றன.
இந்த விவகாரம் இலங்கையின் நீதி முறைமைக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சட்டமா அதிபர் பதவி நீக்கம் செய்யப்படுவாரா? அல்லது இந்த வழக்கு மறுபடியும் சட்ட முறையில் விசாரணைக்கு வருமா என்பது எதிர்காலத்தில் தெரிந்துவிடும்.