கள்ளக்குடியேறிகளாகத் தங்கி இருந்த இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கு பூட்டப்பட்ட விவகாரம்: ஜெய்சங்கர் விளக்கம்.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250207-WA0002.jpg)
அமெரிக்காவில் கள்ளக்குடியேறிகளாகத் தங்கி இருந்த இந்திய நாட்டவர்கள் தனி விமானம் மூலம் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட போது அவர்களின் கை, கால்களில் விலங்கு பூட்டப்பட்ட விவகாரம் இந்திய அரசியலில் பெரும் புகைச்சலைக் கிளப்பி உள்ளது.
அது குறித்து நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 6) விளக்கம் அளித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்படுபவர்களுக்கு விலங்கு பூட்டும் நடைமுறை 2012ஆம் ஆண்டு முதல் அங்கு நடப்பில் உள்ளது என்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ள டோனல்ட் டிரம்ப், தம் நாட்டிலுள்ள சட்டவிரோதக் குடியேறிகள் அனைவரும் அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என்று அறிவித்திருந்தார்.
அவ்வகையில், பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அவ்வாறு சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 104 இந்தியர்கள் தனி விமானம் மூலமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) அமிர்தசரஸ் நகரை வந்தடைந்தனர்.
அமெரிக்கா வெளியேற்றிய இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு, கால்களில் சங்கிலியால் பூட்டப்பட்டிருந்தது போன்ற காணொளிகள் இணையத்தில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமிர்தசரஸ் வந்திறங்கிய 104 பேரில் ஒருவரான ஹர்விந்தர் சிங், 40, கூறுகையில், “கை, கால்களில் விலங்கு பூட்டப்பட்டு 40 மணி நேரம் சித்திரவதை அனுபவித்தோம். விமானத்தில் இருக்கையை விட்டு எழ அனுமதிக்கப்படவில்லை. பலமுறை கெஞ்சிய பிறகுதான், கால்களை இழுத்துக்கொண்டே கழிவறைக்கு நகர்ந்து செல்ல அனுமதி கிடைத்தது,” என்றார்.
இந்தியர்கள் இப்படி நடத்தப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இணையவாசிகளும் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இதன் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்ற மேலவையில் வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 6) விளக்கம் அளித்தார்.
அப்போது, “ஒரு நாட்டினர் இன்னொரு நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பது கண்டறியப்பட்டால், அவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்புவது அனைத்து நாடுகளின் கடமை. அவர்களை நாடுகடத்துவது ஒன்றும் புதிதன்று. சட்டவிரோதமாகக் குடியேறிய பிற நாட்டினர் அனைவரையும் அமெரிக்கா திருப்பி அனுப்பி வருகிறது.
“அப்படி அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்படுவோரில் பெண்கள், குழந்தைகள் தவிர்த்து மற்ற அனைவருக்கும் விலங்கிடும் நடைமுறை கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்தே நடைமுறையில் இருக்கிறது,” என்று திரு ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.
மேலும், இந்தியர்களைத் தவறாக நடத்த வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறிய அவர், இந்தியர்களைக் கள்ளத்தனமாக அமெரிக்காவிற்கு அனுப்பிய இடைத்தரகர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 1,378 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கை, கால்களில் விலங்கு பூட்டப்பட்டதால் அவர்கள் அனைவரும் கழிப்பறைக்குக்கூட செல்ல முடியாமல் மிகுந்த சிரமப்பட்டதாக அமெரிக்கா வெளியேற்றிய இந்தியர்கள் தங்களின் வேதனைகளைப் பகிர்ந்து வருகின்றனர்.