அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் கூறிய அதிர்ச்சித்தகவல்!

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடுகடத்தப்பட்ட நிலையில், பலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டு அதிர்ச்சியடைய வைத்துள்ளனர்.

சொத்துக்களையும் விற்று
அவர்களில் பலர் நீண்ட சட்டவிரோத பயணத்திற்காக முகவர்களுக்கு பணம் செலுத்த தங்கள் நிலத்தையும் பிற சொத்துக்களையும் விற்றுள்ளனர். தற்போது வெறும் கையுடன் பரிதாப நிலையில் சொந்த நாட்டுக்கே திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் அனுபவித்த நெருக்கடிகள் குறித்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியுள்ளது. பலர் தங்கள் பயண முகவர்களால் பாதியிலேயே கைவிடப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

சமூக ஊடக பக்கத்தில் வெளியான காணொளி ஒன்றில், பனாமாவில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இந்தியர்கள் முகாமிட்டிருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

அங்கிருந்து அவர்கள் மெக்சிகோவிற்கும் இறுதியாக அமெரிக்க எல்லைக்கும் நீண்ட பயணத்தைத் தொடர்வதற்கு முன்பு பனாமா காட்டுப் பகுதியில் அவர்கள் முகாமிட்டிருந்துள்ளனர்.

ஆண்கள் ரப்பர் பூட்ஸ் அணிந்து சேற்றில் அமர்ந்திருப்பதையும், பெண்கள் தங்கள் மடியில் கைக்குழந்தைகளுடன் கூடாரங்களுக்கு அருகில் இருப்பதையும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

பனாமாவிலிருந்து தொடங்கும் பயணம் பின்னர் வடக்கு நோக்கி கோஸ்டாரிகா, நிகரகுவா, ஹோண்டுராஸ் மற்றும் குவாத்தமாலாவுக்குச் சென்று மெக்சிகோ எல்லையில் இருந்து அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிப்பார்கள் என்றே கூறப்படுகிறது.

தாம் ஏமாற்றப்பட்டதாக
இதுவரை 104 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். பயணம் முழுவதும் அவர்களின் கைகளும் கால்களும் விலங்கிடப்பட்டிருந்தன, அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னரே அவர்களின் விலங்குகள் அகற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

குருதாஸ்பூரில் உள்ள ஹர்தோர்வால் கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் என்பவர், ஜனவரி 24 அன்று அமெரிக்க எல்லை ரோந்துப் படையினரால் பிடிக்கப்பட்டதாகக் கூறினார். ரூ 30 லட்சம் முகவர் ஒருவரிடம் ஒப்படைத்து முறையாக அமெரிக்கா செல்ல முயன்றதாகவும், ஆனால் தாம் ஏமாற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றதாக கூறும் ஹர்விந்தர் சிங், கத்தார், பிரேசில், பெரு, கொலம்பியா, பனாமா, நிகரகுவா, பின்னர் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு முகவர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மெக்சிகோவிலிருந்து, அவர் மற்றவர்களுடன் சேர்ந்து அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். ரூ 42 லட்சம் செலவிட்டுள்ளதாகவும் ஹர்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியுடன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டன் செல்ல இருக்கும் நிலையிலேயே இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.