கார் பர்மிட், அதிக சம்பளம் வழங்காவிட்டால் 7000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவர் – GMOA எச்சரிக்கை.

இலங்கையில் சுமார் 7,000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே சுமார் 2,000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். மேலும் 5,000 மருத்துவர்கள் வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு எடுத்துள்ளனர் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மருத்துவர்களின் உரிமைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 7,000 மருத்துவர்களின் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

மருத்துவர்கள் நாட்டில் தங்கியிருக்க ஊக்குவிப்பதன் மூலம் இலவச சுகாதார சேவையை பாதுகாக்கும் இலக்கை அடைய, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் 2025 வரவு செலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த முன்மொழிவுகளை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கும் என்று டாக்டர் சுகததாச கூறினார்.

அனைத்து பிரிவினரையும் சேர்ந்த மருத்துவர்களுக்கு தகுதி, செயல்திறன் மற்றும் சந்தை மதிப்பு அடிப்படையில் தனித்துவமான சம்பள கட்டமைப்பை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், மருத்துவர்களின் கொடுப்பனவை புதுப்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அனைத்து பிரிவினரையும் சேர்ந்த மருத்துவர்களும் அரசு சேவையில் உள்ள மற்ற நிர்வாக அதிகாரிகளுக்கு போக்குவரத்து வசதிகள் கிடைக்கும் 22/99 சுற்றறிக்கைக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், அனைத்து பிரிவினரையும் சேர்ந்த மருத்துவர்களின் கூடுதல் கடமை கொடுப்பனவை ஈட்டுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்க்கும் முறையை நிறுவ வேண்டும் என்றும் நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

பட்டப்பின்படிப்பு பயிற்சி மருத்துவர்களின் வெளிநாட்டுப் பயிற்சியின் போது வழங்கப்படும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை புதுப்பித்தல், பயிற்சி மருத்துவர்களின் மாதாந்திர கொடுப்பனவை அதிகரித்தல், அனைத்து பிரிவினரையும் சேர்ந்த மருத்துவர்களின் தர உயர்வு முறையில் உள்ள முரண்பாடுகளை சரிசெய்தல், மருத்துவர்கள் உட்பட தொழில் வல்லுநர்களுக்கு வரி சலுகை கொண்ட அனுமதிப் பத்திரங்களின் கீழ் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வசதிகளை வழங்குதல், மருத்துவர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதிய முறையை மீண்டும் அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றை செய்யுமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.