பாரதியின் கை அசைவின்றி ஓய்ந்தது …
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/Bharathy.png)
மூத்த பத்திரிக்கையாளர்
இராஜநாயகம் பாரதி அவர்கள்
தனது 63ஆவது வயதில் இன்று(09) காலமானார்.
ஞாயிறு தினக்குரல், தினக்குரல் ஒன்லைன் ஆகியவற்றின் முன்னாள் பிரதம ஆசிரியரும் வீரகேசரி வடபிராந்திய பதிப்பின் ஆசிரியருமான மூத்த பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதி இன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
யாழ்.திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட இராஜநாயகம் பாரதி 1980-களில் ஈழமுரசு பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றியதுடன் அதன் பின்னர் முரசொலி பத்திரிகை ஆசிரிய பீடத்திலும் பணியாற்றிய நிலையில் பின்னர் வீரகேசரி பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் உதவியாசிரியராகப் பணியாற்றினார்.
இந்நிலையில் 1997ஆம் ஆண்டு தினக்குரல் பத்திரிகை தோற்றம் பெற்றதன் பின்னர், அதில் தம்மை இணைத்துக்கொண்ட அவர் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக 2021ஆம் ஆண்டு வரை பணிபுரிந்ததுடன் தினக்குரல் ஒன்லைன் ஆசிரியராகவும் செயற்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றியதுடன் தற்போது வீரகேசரியின் வடபிராந்திய பதிப்பின் ஆசிரியராகப் பணிபுரிந்த வேளையிலேயே காலமானார்.
அதுமட்டுமன்றி தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினரான இராஜநாயகம் பாரதி பின்னர் அதன் தலைவராகவும் செயலாளராகவும் இருந்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணம் திரும்பிய அவர் பல்வேறு ஊடகங்களுக்கு கட்டுரைகளை எழுதி வந்தார்.
அன்னாரின் பூதவுடல் தற்போது யாழ்.திருநெல்வேலியில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
எமது கண்ணீர் அஞ்சலி!