ஜனாதிபதி அனுரவின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணம் இன்று ஆரம்பம்!
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250210-WA0012.jpg)
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி மொஹம்மது பின் சயீத் அல் நஹியானின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (10) அந்நாட்டுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதி இன்று முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க “2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில்” கலந்து கொள்ளவுள்ளதுடன், அந்த மாநாட்டில் உரையும் ஆற்றவுள்ளார்.
ஜனாதிபதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி மொஹொட் பின் சைட் அல் நஹியானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதுடன், அந்நாட்டின் துணை ஜனாதிபதி மற்றும் பிரதம அமைச்சரான ஷேக் மொஹம்மது பின் ரஷீத் அல் மக்டூமையும் சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதுடன், இலங்கையின் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத் துறைகளில் உலகின் முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.