சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமொன்றை நிறுவ நீதி அமைச்சு முடிவு!

தேசிய மக்கள் சக்தியின் “வளமான நாடு அழகான வாழ்க்கை” கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகத்தை நிறுவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக, அறிஞர் குழுவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அந்த குழு பின்வரும் பிரிவுகளை உள்ளடக்கியிருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் அல்லது சட்டமா அதிபரால் நியமிக்கப்படும் இரண்டு பிரதிநிதிகள்
நீதி அமைச்சின் செயலாளர்
நீதித்துறையில் தொடர்புடைய விடயத்தில் சிறந்த அறிவுள்ள சிரேஷ்ட நீதிபதி ஒருவர்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அல்லது தலைவரால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஒருவர்
இந்த குழு முன்மொழியப்பட்ட சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகத்தை நிறுவுவது தொடர்பான ஆரம்ப திட்டங்களை வகுக்கவுள்ளது.

ஆரம்ப கருத்தியல் பத்திரம் தயாரிக்கப்பட்ட பின்னர், பொது மக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்களைப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.