மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்-கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை(24-02-2025) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமை (10) உத்தரவிட்டார்.

7 சந்தேக நபர்களில் ஏற்கனவே 5 சந்தேக நபர்கள் அடையாள அணி வகுப்பிற்கு முற்படுத்தப்பட்ட னர்.

ஏனைய இரு சந்தேக நபர்களுக்கு ஆள் அடையாள அணிவகுப்பு கள் இன்றைய தினம் (10) இடம்பெற இருந்த நிலையில் அடையாளத்தை காண்பிப்பதற்காக வருகை தர இருந்த இருவரும் மன்றில் இன்றைய தினம் (10) முன்னிலையாகவில்லை.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

.குறித்த கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் புலனாய்வுத்துறை முன்னெடுத்து வருவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

மன்னார் நீதிமன்றத்தில் கடந்த 16 ஆம் திகதி வழக்கு விசாரணை ஒன்றிற்காக வருகை தந்தவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததோடு பெண் ஒருவர் உள்ளடங்களாக இருவர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கையின் போது பிரதான சந்தேக நபர்கள் உள்ளடங்களாக 7 பேரை மன்னார் பொலிஸார் கைது செய்தனர்.அவர்களில் இராணுவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் அடங்குகின்றனர்.

-குறித்த 7 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் (10) மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டனர்.இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.