வதைமுகாமும் (concentration camp) , விடுதலையில் ரஷ்யாவின் மறுக்கப்பட்ட பங்கும் : சுவிசிலிருந்து சண் தவராஜா

வெற்றி பெற்றவர்களே வரலாறைப் படைக்கிறார்கள் என்பது புகழ்பெற்ற வாசகங்களுள் ஒன்று. காலங் காலமாகக் கற்பிக்கப்பட்டு வரும், தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டுவரும் வரலாறு மீள்வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டுவரும் காலகட்டத்தில் இன்றைய உலகம் உள்ளது. இருந்தும் வரலாறை மறைக்கும் முயற்சிகளும், வெற்றி பெற்றவர்களுக்கான வரலாறை நிலைநிறுத்திவிடும் முயற்சிகளும் தொடரவே செய்கின்றன.

ஆனால், வரலாற்றில் சம்பந்தப்பட்டவர்கள், அதன் சாட்சிகளாக உள்ளவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலேயே வரலாறு மறைக்கப்படும் சம்பவங்களும் நடந்தேறிய வண்ணமேயே உள்ளன. அத்தகைய ஒரு வரலாற்று மறைப்பு உலக வரலாற்றின் மிக முக்கிய சம்பவம் ஒன்றில் அண்மைக் காலத்தில் நிகழ்ந்தேறியிருக்கிறது.

நவீன உலகம் இரண்டு உலகப் போர்களைச் சந்தித்திருக்கின்றது. இந்த இரண்டு உலகப் போர்களிலும் கோடிக்கணக்கான மனிதர்கள் பலியாகிப் போயிருக்கிறார்கள். போரில் நேரடியாக ஈடுபட்ட படையினரை விடவும் பல மடங்கு அதிகமான பொதுமக்கள் இறந்து போயிருக்கிறார்கள், கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போரில் யேர்மன் நாஸிப் படைகள் செய்த கொலைகளை வரலாறில் மறந்துவிட முடியாது. யூதர்கள், ரோமாக்கள் எனப்படும் நாடோடி இனத்தைச் சேர்ந்தவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் வாழ்ந்த அப்பாவிப் பொதுமக்கள், போர்க் கைதிகள் என கோடிக் கணக்கான உயிர்களை யேர்மன் படைகள் கொன்று குவித்தன. இந்தக் கொலைகளைப் புரிவதற்காகவே விசேடமான வதை முகாம்கள் நிறுவப்பட்டு, பல பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு மிருகங்களை விடக் கொடூரமாக மனிதர்கள் கொல்லப்பட்டார்கள். ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இத்தகைய வதைமுகாம்களை நாஸிப் படைகள் அமைத்திருந்தன.

இத்தகைய வதைமுகாம்களுள் மிகப் பெரியது போலந்து நாட்டில் அவுஸ்விட்ஸ்-பிர்க்கனாவு எனும் இடத்தில் இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் அமைக்கப்பட்டது. 40 பிரிவுகளாக அமைக்கப்பட்டிருந்த இந்த முகாம் தொகுதியில் கைதிகளை அடைத்து வைக்கும் இடங்களோடு அவர்களைக் கூட்டாகக் கொல்வதற்கான விசவாயுக் கூண்டுகளும் அமைக்கப்பட்டிருந்தன.

1939 செப்டெம்பரில் போலந்து மீது படையெடுத்த ஹிட்லரின் படைகள் நாட்டைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன. அவுஸ்விட்ஸில் நிறுவப்பட்ட படை முகாமில் முதலில் போலந்து நாட்டைச் சேர்ந்த கைதிகள் அடைத்து வைக்கப்பட்டனர். 1940 மே மாதத்தில் யேர்மன் நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட குற்றவாளிகளின் உதவியோடு இந்த முகாம் ஒரு வதைமுகாமாக மாற்றியமைக்கப்பட்டது. 1941 ஆகஸ்ட் மாதத்தில் முதல் தடவையாக போலந்து மற்றும் சோவியத் நாட்டுக் கைதிகள் விசவாயு அறைகளில் அடைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். 1942இல் இந்த முகாம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.

1942 முதல் 1944 வரையான காலப் பகுதியில் பல்வேறு நாடுகளில் இருந்தும் தொடருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்ட யூதர்கள் உள்ளிட்ட கைதிகள் இங்கு அடைத்து வைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். இவ்வாறு அழைத்து வரப்பட்ட 1.3 மில்லியன் மக்களில் 1.1 மில்லியன் வரையான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இங்கே கொலை செய்யப்பட்டார்கள். இவ்வாறு கொலை செய்யப்பட்டோரில் 960,000 யூதர்கள் அடங்குவர். இவர்களுள் 865,000 பேர் விசவாயு அறைகளுள் அடைத்து வைக்கப்பட்டு விசமூட்டிக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட ஏனையோரில் யூதர்கள் அல்லாத 74,000 போலந்து நாட்டவரும், 21,000 ரோமானியர்களும், 15,000 சோவியத் போர்க் கைதிகளும், ஏனைய நாடுகளைச் சேர்ந்த 15,000 பேரும் அடங்குவர். விசவாயு அறைகளுள் அடைக்கப்பட்டுக் கொல்லப்பட்டவர்கள் போக மீதமானோர் பட்டினி, முழுச்சோர்வு, மோசமான நோய்கள், அடித்துச் சித்திரவதை மற்றும் துப்பாக்கிச் சூடு போன்றவற்றால் கொல்லப்பட்டார்கள். அது தவிர, பலர் மருத்துவப் புரிசோதனை முயற்சிகளில் உயிர் துறந்தனர்.

1945 யனவரி 27ஆம் திகதி அவுஸ்விட்ஸ் வதை முகாம் சோவியத் செஞ்சேனையினால் கைப்பற்றப்பட்டது. செஞ்சேனை காலாட்படையின் 100வது பிரிவின் படைவீரர் ஒருவர் காலை 9.00 மணியளவில் முகாமினுள் காலடி எடுத்து வைத்தார். அப்போது முகாமின் பிரதான பிரிவுகளுள் இருந்த 7,000 கைதிகளும், ஏனைய துணை முகாம்களுள் இருந்த 500 கைதிகளும் உயிரோடு மீட்கப்பட்டனர். அந்த வேளையில் 600க்கும் அதிகமான சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன.  அவுஸ்விட்ஸ் விடுவிக்கப்பட்ட நாள் 2005ஆம் ஆண்டு முதல் சர்வதேச படுகொலை நினைவு நாளாக உலகினால் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. அவுஸ்விட்ஸ்-பிர்க்கனாவு அரச அருங்காட்சியகம் போலந்து அரசாங்கத்தினால் 1947இல் நிர்மாணிக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் உலக பாரம்பரிய இடமாக 1979இல் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது.

அவுஸ்விட்ஸ்-பிர்க்கனாவு வதைமுகாம் விடுவிக்கப்பட்டதன் 80வது நினைவு நாள் கடந்த யனவரி 27ஆம் திகதி நினைவு கூரப்பட்டது. இந்த நினைவு நிகழ்வில் அவுஸ்விட்ஸ்-பிர்க்கனாவு வதைமுகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளுள் இன்றும் உயிரோடு வாழும் 56 பேர் கலந்து கொண்டனர். யேர்மன் அதிபர் ஒலப் சோல்ஸ், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ், உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலன்ஸ்கி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால், அந்த வதைமுகாமை விடுதலை செய்ததில் முக்கிய பங்காற்றிய மேனாள் சோவியத் ஒன்றியத்தின் – தற்போதைய ரஸ்யாவின் – தலைவர்கள், பிரதிநிதிகள், முகாமை விடுதலை செய்த படையினரில் இன்றும் உயிரோடு வாழ்பவர்கள் என ஒருவர் கூட அழைக்கப்பட்டிருக்கவில்லை.

ரஸ்யா அழைக்கப்படாததற்குச் சொல்லப்படும் காரணம் அந்த நாடு உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதே. உக்ரைன் மீதான போரையும் வரலாற்றின் முக்கிய நிகழ்வையும் குழப்பிக் கொள்ளும் மேற்குலகின் போக்கு ஒரு வகையில் உண்மை வரலாற்றை மாற்றி எழுதுவதற்குச் சமமானதே.

இரண்டாம் உலகப் போரில் உலகின் பல நாடுகளையும் சேர்ந்த படையினரும் மக்களும் மரணத்தைத் தழுவியமை தெரிந்ததே. நாஸிக்களுக்கு எதிரான போரில் ரஸ்யா, பிரான்ஸ், பிரித்தானியா, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவும் அமெரிக்காவும் பங்கெடுத்துக் கொண்டன என்பதையும் நாமறிவோம். ஆனால், இந்தப் போரில் அதிக உயிர்களை விலையாகக் கொடுத்த நாடு தற்போதைய ரஸ்யா, மேனாள் சோவியத் ஒன்றியம் என்பதை மறுப்பதற்கில்லை.

சுயாதீன தகவல்களின்படி, இந்தப் போரில் 70 முதல் 85 மில்லியன் வரையான மனித உயிர்கள் பலியானதாக மதிப்பிடப்படுகின்றது. பதிவு செய்யப்பட்ட தரவுகளின் பிரகாரம் 60 மில்லியன் பேர் இறந்துள்ளனர். இதில் 40 மில்லியன் பொதுமக்களும் 20 மில்லியன் படையினரும் அடங்குவர். சோவியத் ஒன்றியத்தில் மாத்திரம் 27 மில்லியன் உயிர்கள் பலியாகின. இதில் 8.7 மில்லியன் மாத்திரமே படையினர், ஏனையோர் யாவரும் பொதுமக்களே. சோவியத் ஒன்றியத்தின் மக்கள் தொகையில் கால் பங்கினர் ஒன்றில் கொல்லப்பட்டனர், அன்றி காயங்களுக்கு இலக்காகினர்.

இத்துணை தியாகங்களைச் செய்து, அவுஸ்விட்ஸ் வதை முகாமை விடுதலை செய்து, யேர்மனியின் தலைநகர் பெர்லின் வரை வந்து ஹிட்லர் தற்கொலை செய்வதற்குக் காரணமாக இருந்த சோவியத் ஒன்றியத்தின் பெயரை வரலாற்றில் இருந்து மறைப்பது என்பது எத்தனை அநீதியானது? இத்தகைய வரலாற்றுப் புரட்டை யார் சீர் செய்வது? தடுப்பது?

உண்மை வரலாற்றை தற்காலத் தலைமுறையிடம் மறைப்பதானது கடந்த கால வரலாற்றை மறைப்பது மட்டுமன்று. அது எதிர்கால வரலாறையும் மறைப்பதற்கு ஒப்பானதே.

சுவிசிலிருந்து சண் தவராஜா

Leave A Reply

Your email address will not be published.