ஹமாஸுக்கு டிரம்ப் எச்சரிக்கை: பிப்.15க்குள் பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் கடும் விளைவுகள்
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250211-WA0012-1.jpg)
காஸாவில் சிறையில் உள்ள அனைத்து பிணைக்கைதிகளும் வரும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் விடுவிக்கப்பட வேண்டும், இல்லையெனில் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பிணைக்கைதிகளை குறித்த காலக்கெடுவுக்குள் விடுவிக்காவிட்டால், இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
ஹமாஸ் போராளிகள் அடுத்த கட்ட பிணைக்கைதி பரிமாற்றத்தை தாமதிக்கலாம் என மிரட்டியதையடுத்து, இந்த விவகாரத்தில் திரு. டிரம்ப் நேரடியாக தலையிட்டுள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
“ஹமாஸ் எடுத்திருக்கும் முடிவு மிகவும் ஆபத்தானது. போர்நிறுத்தம் தொடர வேண்டுமா என்பது இஸ்ரேலின் விருப்பத்திற்கே விட்டுவிட வேண்டிய நிலை வந்துவிடும்.
“எனது நிலைப்பாடு தெளிவானது – பிப்ரவரி 15, சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள் அனைத்து பிணைக்கைதிகளும் விடுவிக்கப்படாவிட்டால், போர்நிறுத்தத்தை நான் ரத்து செய்ய உத்தரவிடுவேன். அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கும்.
“ஒரு சிலர் மட்டுமல்ல, அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக தங்கள் நாடுகளுக்கு திரும்ப வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இஸ்ரேல் தற்போதே போர்நிறுத்தத்தை மீற முடியும் என்று நான் நினைத்தாலும், சனிக்கிழமை மதியம் வரை ஒரு அவகாசம் அளிக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.