புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு இலங்கைக்கு உதவுங்கள் என சஜித் சுவிட்சர்லாந்திடம் கோரிக்கை

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதர் கலாநிதி சிரி வோல்ட் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சிறப்பு கலந்துரையாடல் நேற்று (பெப்ரவரி 11) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அங்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுவிட்சர்லாந்து தூதரிடம், நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் வழங்கக்கூடிய அதிகபட்ச உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். மேலும் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதற்கான சுவிட்சர்லாந்தின் 2023 சட்டத்தை பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இது காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வரலாற்று நடவடிக்கையாகும் என்று குறிப்பிட்டார்.

கடந்த வார இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட மின் தடை குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கடந்த காலங்களில் தன்னையும் தனது குழுவினரையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்து கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திற்கு தொடர்ந்து முன்மொழிந்ததாக கூறினார். மேலும் மின் நுகர்வு மற்றும் மின் உற்பத்தியால் ஏற்பட்ட அமைப்பு ரீதியான சமநிலையின்மை இந்த மின் தடைக்கு காரணம் என்பதை தெளிவுபடுத்தினார்.

நிர்வாகம் புறக்கணித்த தீர்க்கமான உள்கட்டமைப்பு அதாவது பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) மற்றும் பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு ஆலைகள் (PSPP) ஆகியவற்றின் அவசர தேவையையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு வலியுறுத்தினார்.

எனவே மின்வெட்டு இல்லாமல் மக்களுக்கு தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்க குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுவிட்சர்லாந்து தூதரிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் கலந்து கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.