சென்னையில் பாலியல் தொல்லை: மாணவிகள் புகாரளிக்க உதவி எண் 14417 அறிவிப்பு

சென்னை கல்வி நிலையங்களில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அதிகரித்துவரும் நிலையில், அதுகுறித்துப் புகாரளிக்க தமிழக அரசு புதிய உதவி எண்ணை அறிவித்துள்ளது.

அதன்படி, பள்ளி, கல்லூரிகளில் யாரேனும் தங்களுக்குப் பாலியல் தொல்லை தந்தால், அதுகுறித்து 14417 என்ற எண் வழியாக மாணவிகள் புகார் அளிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அண்மையில், கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் மாநிலம் முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.

இந்நிலையில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் புதன்கிழமை (பிப்ரவரி 12) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, பள்ளிகளில் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டால் மாணவிகள் புகாரளிக்க ஏதுவாக புதிய உதவி எண் அறிவிக்கப்பட்டது.

மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல் அல்லது அச்சுறுத்தல்கள் போன்ற பாதுகாப்பற்ற சூழல் நிலவினால் உடனடியாக உதவி மையத்தை அழைக்கும்படி மாணவிகளுக்குப் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.