உள்ளுர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்)” எனும் சட்டமூலம் தொடர்பான தீர்ப்பை சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டு மூன்று நீதிபதிகள் கொண்ட குழாத்தினால் விசாரிக்கப்பட்ட “உள்ளுர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்)” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (14) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய, சட்டமூலம் முழுமையாகவும் மற்றும் குறிப்பாக 2 மற்றும் 3 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுவதால், அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும் என நீதிபதிகள் குழாத்தின் பெரும்பான்மையினராகிய நீதிபதிகள் இருவர் தீர்பளித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
அத்துடன், சட்டமூலம் முழுமையாகவும் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படுவதில்லையென்பதால் அதனைப் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையொன்றின் மூலம் நிறைவேற்றப்பட முடியும் என நீதிபதிகள் குழாத்தின் மீதமுள்ள நீதிபதி தீர்ப்பளித்துள்ளதாகவும் சபாநாயகர் தனது அறிவித்தலில் மேலும் தெரிவித்தார்.