சட்டவிரோதமாக குடியேறிய 119 இந்தியர்களை நாடு கடத்துகிறது அமெரிக்கா!

புதுடெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததாக கண்டறியப்பட்டவர்களில் 119 பேர் கொண்ட விமானம் சனிக்கிழமை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த சுமார் 8 லட்சம் பேர் அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக 15 லட்சம் வெளிநாட்டினர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 18,000 பேர் உள்ளனர்.
இவர்களில் 104 இந்தியர்கள் அடங்கிய முதல் குழு, அமெரிக்காவின் விமானப்படை விமானம் மூலம் கடந்த 5-ம் தேதி அமிர்தசரஸ் நகருக்கு கொண்டுவரப்பட்டனர். இந்த 104 இந்தியர்களில் 30 பேர் பஞ்சாப் மாநிலத்தையும், தலா 33 பேர் ஹரியானா மற்றும் குஜராத் மாநிலத்தையும், தலா மூன்று பேர் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசத்தையும், இரண்டு பேர் சண்டிகரையும் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 119 பேர் நாளை (சனிக்கிழமை) இந்தியா திரும்ப உள்ளனர். சனிக்கிழமை (பிப்.15) இரவு 10 மணியளவில் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 119 பேரில், 67 பேர் பஞ்சாபையும், 33 பேர் ஹரியானாவையும், எட்டு பேர் குஜராத்தையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் உத்தரப் பிரதேசத்தையும், தலா இரண்டு பேர் கோவா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானையும், தலா ஒருவர் இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரையும் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்த நாடு கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.
“அமெரிக்காவின் டெக்சாஸ், கலிபோர்னியா, சான்டியாகோ உள்ளிட்ட 12 மாகாணங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த மாகாணங்களில் நாள்தோறும் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 25,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு, பின்னர் அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
எந்த நாடும் ஏற்காத சட்டவிரோத குடியேறிகளை எல் சல்வடார் நாட்டில் உள்ள சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவுக்கும் எல் சல்வடார் நாட்டுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது” என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.