ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1000 ஏக்கர் நிலம் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்க நகைகள் உள்பட 465 பொருள்கள் தமிழக அரசிடம் பெங்களூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையில், ஜெயலலிதாவின் வாரிசுதாரரான ஜெ.தீபா பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் தனக்கும் தனது சகோதரருக்கும் மட்டுமே சொந்தம் என்றும் அதை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை பிப்ரவரி 14ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள் உட்பட பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருள்கள் அனைத்தையும் தமிழக அரசிடம் ஒப்படைப்பதில் எந்தவொரு தடையுமில்லை என உத்தரவிட்டது.
மேலும், தீபாவின் மனுவையும் தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் பொருள்களைத் தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணியைக் கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. அப்பொருள்கள் பிப்ரவரி 14ஆம் தேதி இரவு தமிழகம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.