ரயிலில் பயணிக்க வேண்டி திரண்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு.

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி
18 பேர் உயிரிழப்பு

இந்திய நாட்டின் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் நேற்று சனிக்கிழமை (15) இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தலைநகர் டெல்லியில் உள்ள புதுடெல்லி ரயில் நிலையத்தில் ரயிலில் பயணிக்க வேண்டி திரண்ட காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் புதுடெல்லி ரயில் நிலையத்தின் நடைமேடை 13 மற்றும் 14-ல் நடந்துள்ளது. உயிரிழந்தந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி உறுதி செய்துள்ளார். பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரயாக்ராஜுக்குச் செல்லும் இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் 13 மற்றும் 14-வது நடைமேடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என டெல்லி தீயணைப்பு துறையின் தலைவர் அதுல் கார்க் கூறியுள்ளார்.

கூட்ட நெரிசல் ஏற்பட்ட நடைமேடை எண் 13 மற்றும் 14-ல் நடைமேடையில் மக்கள் தங்களது உடைமைகளை விட்டுச் சென்றது அப்படியே இருக்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளன. ட்ராலி, தண்ணீர் பாட்டில், காலணி போன்றவை அங்கும் இங்கும் சிதறிக் கிடக்கிறது.

சனிக்கிழமை இரவு சுமார் 10 மணி அளவில் மகா கும்பமேளாவுக்கான ரயிலை பிடிக்க அதிகளவில் மக்கள் புதுடெல்லி ரயில் நிலைய நடைமேடை 13 மற்றும் 14-ல் திரண்டனர். அதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் பயணிகளும் பீதி அடைந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக அதில் சிக்கியவர்களுக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு ரயில்வே போலீஸார், காவல் துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அங்குள்ள சூழலை கருத்தில் கொண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் விரைந்தன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேர் நடைமேடையில் கூடியது தான் கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 1,500 முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகள் விற்பனையானதும், ஸ்வதந்த்ரதா சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஷ்வர் ராஜ்தானி ஆகிய ரயில்கள் தாமதமாக வந்ததும் இதற்கு காரணம் என ரயில்வே துணை பொலிஸ் கமிஷனர் கே.பி.எஸ் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.