இந்தோனீசியாவின் சூரிய மின்சக்தி ஏற்றுமதித் திட்டம்.

இந்தோனீசியாவின் பாத்தாம் தீவில், மிதக்கும் சூரிய மின்சக்திக் கட்டமைப்பை உருவாக்கும் புதிய ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த உற்பத்தி ஆலை, பிப்ரவரி 14ஆம் திகதி அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.

பாத்தாம் தீவிலிருந்து சிங்கப்பூருக்குச் சூரிய மின்சக்தியை விநியோகிப்பது தொடர்பான முக்கிய ஒப்பந்தத்தை அடுத்து இந்த ஆலை தொடங்கப்பட்டது.

சுரபாயாவைத் தளமாகக் கொண்ட ‘உசோபேடெர்’ நிறுவனம், மிதக்கும் ஒளிமின்னழுத்தக் கட்டமைப்புகளுக்கான நங்கூரங்கள், தட்டைப் படகுகள் போன்றவற்றை உற்பத்தி செய்யும்.

இந்தோனீசியா முழுவதும் மின்வாகனங்களுக்கான மின்னேற்றி நிலையங்களை அமைக்கும் உத்தோமோடெக் குழுமத்தைச் சேர்ந்த நிறுவனம் அது.

பாத்தாம் தீவில் மூன்று மாதங்களாகச் செயல்படும் ஆலையைக் கட்டுவதற்கான முதலீடு குறித்த மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அது 8,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அங்கு 100 பேர் வேலை செய்கின்றனர்.

இந்தோனீசியாவின் புதுப்பிக்கக்கூடிய எரிசக்திச் சந்தையில் அந்த ஆலை முக்கிய இடம் வகிக்கிறது. அந்நாட்டில் சூரிய மின்சக்திப் பயன்பாட்டுக்கு மாறும் போக்கு மிக மெதுவாகவே அதிகரித்தாலும் அந்தத் துறை விரைவாக விரிவடையும் சாத்தியக்கூறுகள் தென்படுவதாகக் கூறப்படுகிறது.

நிலக்கரியைப் பயன்படுத்தி அனல்மின் நிலையத்தில் தயாரிக்கப்படும் மலிவான எரிசக்திக்கு அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை தருவதால்தான் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மிக மெதுவாகப் புழக்கத்திற்கு வருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இத்துறைக்கு முதலீடுகளை ஈர்க்க, இந்தோனீசிய அரசாங்கம், நீர்த்தேக்கங்களில் அல்லது கடற்கரையோரங்களில் மிதக்கும் சூரிய மின்சக்தித் தகடுகள் கட்டமைப்பை நிறுவுவதை ஊக்குவிக்கிறது.

நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான கூடுதல் செலவையும் உள்ளூர்வாசிகளை இடமாற்றம் செய்வதையும் தவிர்க்க இது உதவுகிறது.

சிங்கப்பூர் ஆண்டுக்கு 2 கிகாவாட் அளவிலான புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியை இன்னும் ஐந்தாண்டுகளுக்குள் இந்தோனீசியாவிலிருந்து இறக்குமதி செய்யத் தொடங்கும்.

சிங்கப்பூரின் வருடாந்தர மின்சாரத் தேவையில் ஏறக்குறைய 15 விழுக்காட்டை ஈடுசெய்ய அது உதவும்.

Leave A Reply

Your email address will not be published.