திருமண ஆசை காட்டி 15 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த குஜராத் ஆடவர் கைது

திருமண வரன் தேடும் திருமணத் தளத்தில் பெண்களுடன் நட்புகொண்டு நேரில் அவர்களை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த குஜராத் இளைஞர் பிடிபட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் 26 வயதான ஹிமான்சு யோகேஷ்பாய் பாஞ்சல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஹிமான்சு ஒரு திருமணத் தளம் மூலம் பெண்களிடம் தன்னை டெல்லி காவல்துறையின் இணையக் குற்றப் பிரிவு அதிகாரி என்று அறிமுகப்படுத்தி நட்பு கொள்வார்.

திருமணத் தளத்தின் வழி தினமும் அவர்களிடம் நட்பாகப் பேசிப் பழகுவார்.

பின்னர் அவர்களை அழைத்துக்கொண்டு பல இடங்களுக்குச் சென்று, அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை கொடுத்திருக்கிறார்.

பின்னர் திருமணம் செய்துகொள்வதாக கூறி அவர்களை விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஹிமான்சுவை காவலர்கள் தேடி வந்தனர்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஹிமான்சு கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சுமார் 15 பெண்களை அவர் ஏமாற்றி வன்கொடுமை செய்துள்ளதாகத் தெரியவந்தது.

மோசடிக்கு ஹிமான்சு பயன்படுத்திய அதிக விலையுடன்கூடிய ஐந்து கைப்பேசிகளையும் மடிக்கணினியையும் காவலர்கள் கைப்பற்றியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.