பாதாள உலக மோதலின் மறைக்கப்பட்ட பக்கத்தை மகாநாயக்க தேரர்களுக்கு விபரித்த ஜனாதிபதி.

தற்போது பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் மோதல்களை வேறு வெளிப்புறக் குழுக்கள் இயக்குகிறன என்றும், பாதுகாப்புப் படையின் சில உறுப்பினர்கள் அவர்களுக்கு இரகசியமாக உதவுகிறார்கள் என்றும் உளவுத்துறை வெளிப்படுத்தியுள்ளதாக மல்வத்து அஸ்கிரி மகாநாயக்க தேரர்களிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக இரு தரப்பு மகா விகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று கண்டிக்கு வந்து அவர்களைச் சந்தித்த போது ஜனாதிபதி இது குறித்து மகாநாயக்க தேரர்களுக்குத் தெரிவித்தார். இந்த சூழ்நிலையை அடையாளம் கண்டு ஒடுக்குவதற்கு கடுமையாக உழைப்பதாக மல்வத்து அஸ்கிரி மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
அங்கு பேசிய மகாநாயக்க தேரர்கள், இந்த அரசு மக்களால் பெரும் எதிர்பார்ப்புடன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் முழுப் பொறுப்பும் அரசுக்கு உள்ளது என்றும் தெரிவித்தனர்.
தற்போதைய சட்ட கட்டமைப்பிற்குள் இந்த குற்றக் கும்பல்களை ஒடுக்குவது அரசாங்கத்தின் உறுதியான பொறுப்பு என்றும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
இருப்பினும், மகாநாயக்க தேரர்களை சந்தித்த பிறகு ஊடகங்களிடம் பேசிய ஜனாதிபதி, இந்த சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என கூறினார்.
“தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இது பொதுமக்களின் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லை.”
“ஆனால் இந்த பாதாள உலகக் குழுக்கள் நீண்ட காலமாக வளர்ந்து பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களுக்குள் பரவியுள்ளன. எனவே, அவர்களின் உறவுகள் ஒரு அழிவுகரமான வலையமைப்பாக வளர்ந்துள்ளன. அதை ஒடுக்க நாங்கள் தீவிர முயற்சி செய்கிறோம்.”
“நாங்கள் இதைச் செய்ய முடியும் என்று எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இவை அரசியல் பாதுகாப்பின் கீழ் வளர்ந்தன. இப்போது அரசியல் பாதுகாப்பு இல்லை.”
“மறுபுறம், சில தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கின்றன, நாங்கள் அது குறித்து விசாரணைகளை தொடங்கியுள்ளோம். இவை வெறும் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலா அல்லது இதற்குப் பின்னால் வேறு யாராவது இவற்றை ஒருங்கிணைத்து இயக்குகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. அது குறித்து விசாரணைகளை தொடங்கியுள்ளோம்.”என்றார்.